மதுபான பார்களுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சில்லறை விற்பனை கடைகளிலிருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேயோ தான் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஆறு மாதங்களுக்குள், தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான பார்களை மூட டாஸ்மாக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, சில்லறை விற்பனை கடைகளிலிருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேயோ தான் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதி சி. சரவணன் பிறப்பித்த உத்தரவில், "1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், மதுபானக் கடைகளை ஒட்டிய இடங்களில் டாஸ்மாக் மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில், தின்பண்டங்கள் விற்கவும், காலி பாட்டில்களை சேகரிக்கவும் உரிமம் வழங்குவதை அனுமதிக்கவில்லை.

தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டதால், டாஸ்மாக்கின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பார்கள் வராது. 1937ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் 2003 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மதுபானங்களை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவே விற்பனை செய்ய டாஸ்மாக்குக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பார்களை நடத்துவதற்கு உரிமம் வழங்கும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரிடம் மட்டுமே இருப்பதால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ "பார்களை" நடத்த டாஸ்மாக்குக்கு அனுமதி தரப்படவில்லை. டாஸ்மாக் சில்லரை மதுக்கடை வளாகத்தை குத்தகைக்கு மட்டுமே எடுக்கிறது. 

சில நேரங்களில் குடிமை அமைப்புகளாக இருக்கும் அந்த வளாகங்களின் உரிமையாளர்கள், அருகிலுள்ள பகுதியை "பார்" ஆகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கி, தின்பண்டங்கள் விற்கவும் காலி மது பாட்டில்களை சேகரிக்கவும் தனியாருக்கு குத்தகைக்கு விடுகிறார்கள். 

1937 சட்டப் பிரிவு 4ஏ உள்ள வரை, இம்மாதிரியான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. பொது இடங்களில் குடிபோதையில் காணப்படுபவர்கள் மீது மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என சட்டம் கூறுகிறது. 

பொது இடத்தில் ஒரு நபர் குடிபோதையில் இருக்க சட்டம் அனுமதிக்காத நிலையில், எனவே இம்மாதிரியான இடங்களில் மது அருந்துவதைப் டாஸ்மாக் அனுமதிக்கக் கூடாது. மதுக்கடை பொது இடமாக இல்லாவிட்டாலும், மது அருந்திய பின், பொது இடங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, டாஸ்மாக் நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாகவும் செய்ய முடியாது" என்றார்.

2019-21 ஆண்டுக்கான பார் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com