கணவர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக பிரசாரம் செய்வாரா காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கௌர்?

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தனது கணவர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கௌர். 
கணவர் அமரீந்தர் சிங்குடன் பிரனீத் கௌர்.
கணவர் அமரீந்தர் சிங்குடன் பிரனீத் கௌர்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தனது கணவர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கௌர். 

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். 

கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கௌர். இவர் பாட்டியாலா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆவார். இவர் இன்னமும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார். 

இவர் கடந்த சில ஆண்டுகளாவே காங்கிரஸ் கட்சிப் பணிகளில் பெரிதாக ஆர்வமின்றி இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில்கூட கலந்துகொள்ளாமல் விலகியே இருக்கிறார். கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருப்பதற்கு பதில் அளிக்குமாறு கடந்த ஆண்டு நவம்பரில் அவருக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நடக்கவுள்ள பேரவைத் தேர்தலில் பாட்டியாலா பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு சர்மா போட்டியிடுகிறார். இவர், பாட்டியாலா எம்.பி.யான பிரனீத் கௌரை கட்சி சார்பில் பிரசாரம் செய்ய வேண்டும் அல்லது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

பாட்டியாலா பேரவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி(பாஜக கூட்டணி) சார்பில் போட்டியிடும் தனது கணவருக்கு எதிராக பிரனீத் கௌர் பிரசாரம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து 'தேர்தலின்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?' என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கௌர், 'நான் எனது குடும்பத்துடன் இருக்கிறேன். குடும்பமே எல்லாவற்றிற்கும் மேலானது' என்று கூறியுள்ளார்.

இதன் மூலமாக நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பிரனீத் கௌர், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் செய்யமாட்டார் என்று தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் கௌர் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும், காங்கிரஸ் கட்சி அனுப்பிய நோட்டீஸ் குறித்து கேட்டதற்கு, 'எனக்கு கட்சியிடம் இருந்து அப்படி எதுவும் நோட்டீஸ் வரவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே நான் தெரிந்துகொண்டேன்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக தனது கணவர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியபோது அவர் கூறியதாவது: 

'அமரீந்தர் சிங் கட்சியின் மூத்த தலைவர். பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்தவர். அவர் கட்சிக்காக உழைத்துள்ளார். ஆனால், அவர் கட்சியில் அவமானப்படுத்தப்பட்டு விலக வைக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு வரலாற்று வெற்றியை தேடித்தந்த தலைவரை இப்படி நடத்துவது தவறு. 

ஆனால், நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதில்லை. எம்.பி. பதவியில் தொடர்ந்து இருப்பேன்' என்று கூறியுள்ளார். 

பிரனீத் கௌர் அப்போதைய பஞ்சாப் மாகாணத்தின் ஷிம்லா பகுதியில் பிறந்தவர். 1964 ஆம் ஆண்டு கேப்டன் அமரீந்தர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது, அமரீந்தர் சிங் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். 1980ல் பாட்டியாலா மக்களவைத் தொகுதியில் இருந்து அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தார். 

பிரனீத் கௌர் 1999ல் முதல்முறையாக பாட்டியாலா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தொடர்ந்து 2004,2009, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 2009 -12 வரை வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com