
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் 5 கட்ட வாக்குப் பதிவின் முடிவில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தாண்டிவிட்டதாக பாஜக முன்னாள் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
"உத்தரப் பிரதேச தேர்தலில் முதல் 5 கட்ட வாக்குப் பதிவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பாஜக அடைந்துவிட்டது. 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து ஆட்சியமைப்பதற்காக 6-வது மற்றும் 7-வது கட்டங்களில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
இதையும் படிக்க | ஹிஜாப்: வழக்குத் தொடர்ந்த 3 மாணவிகள் பழிவாங்கப்படுகின்றனரா?
2014-இல் ஒட்டுமொத்த நாடும், உத்தரப் பிரதேசமும் மோடியை பிரதமராக்கியது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றது. அதிலிருந்து பாஜகவின் வெற்றி ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்த முறை வெற்றியைத் தாண்டி நிறைய இடங்களை மக்கள் கொடுக்க வேண்டும்."
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ம் கட்ட தேர்தல் 10 மாவட்டங்களிலுள்ள 57 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. அமித் ஷா பிரசாரம் மேற்கொண்ட குஷிநகருக்கு 6-வது கட்டமாக மார்ச் 3-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 4 கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், 5-ம் கட்ட வாக்குப் பதிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதுவரை 292 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
மீதமுள்ள தொகுதிகளுக்கு கடைசி 2 கட்டங்களாக மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.