
சந்திரசேகர ராவ் (கோப்புப் படம்)
இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
படிக்க | இன்று நள்ளிரவு ரூ.75,000 கோடிக்கு ஏலம்: ஆர்பிஐ
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வு மத்திய அரசுக்கு பரந்த அளவிலான உரிமைகளை அளித்தாலும், மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்படுவதால் இரண்டுமே ஒன்றுக்கொன்று இணையானதுதான்.
ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் செய்வதால், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால் தெலங்கானா அரசு இதனைக் கடுமையாக எதிர்க்கிறது.
மக்களுக்குத் தேவையான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மாநில அரசுகள்தான் முன்னின்று செயல்படுத்தி வருகின்றன. அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளே உறுதுணையாக உள்ளனா்.
இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்குச் செல்ல வற்புறுத்துவது மாநில நிா்வாகத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தும்.
படிக்க | ‘3 மாநிலங்களில் ஆட்சிக்கு வருவோம்’: மகாராஷ்டிர காங். தலைவர்
அதுமட்டுமின்றி அவர்களது உரிமை அல்லது மாநில அரசுகளின் உரிமையின்றி அவர்களை மத்திய அரசு பணியில் ஈடுபட நிர்பந்திக்கவும் மசோதா வழிசெய்கிறது. இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சுமையையே ஏற்படுத்தும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத்திருத்தத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.