குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளர் நக்வி?

முக்தார் அப்பாஸ் நக்வி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், ஆளும் கூட்டணி வேட்பாளராக இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள தெரிவிக்கின்றன.
முக்தார் அப்பாஸ் நக்வி
முக்தார் அப்பாஸ் நக்வி


மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த முக்தார் அப்பாஸ் நக்வி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், ஆளும் கூட்டணி வேட்பாளராக இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள தெரிவிக்கின்றன.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், தேசிய ஜனநாயக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் நக்வியாகவே இருக்கும் என்றும், அதில் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்றே கணிக்கப்படுகிறது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், முக்தார் அப்பாஸ் நக்வி தேசிய ஜனநாயகக் கூட்டணி, வேட்பாளராக நிறுத்தும்பட்சத்தில், எதிர்க்கட்சிகளுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை, அவரை ஆதரித்தே ஆக வேண்டிய நிலை ஏற்படும் என்பது ஊகம்.

அரசியலில் நக்வி எப்போதுமே தனது மாண்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். தனது ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையிலும் அவர் நடுநிலைமை, நேர்மையை கடைபிடித்து வந்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்த போதும் சரி, மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்தபோதும் சரி என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில், ஒரேயொரு முஸ்லிம் அமைச்சராக இருந்தவர் நக்வி. அவரும் தற்போது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது ஒரு முஸ்லிம் மத்திய அமைச்சரும் இல்லை. அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இந்த கூட்டணியில் சுமார் 400 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், ஒரு முஸ்லிம் எம்பியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார் மற்றும் ராம்பூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்கூட, பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக நக்வி மிகப்பெரிய பங்கினை ஆற்றியிருந்தார். 

ஆனால், ஒரு பழமொழி இருக்கிறதே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று. அதுபோல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் நக்விதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றாலும் கூட, தற்போது மேலும் மூன்று புதிய பெயர்கள் வேட்பாளர் பட்டியலுக்காக அலசப்பட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  சுரேஷ் பிரபு, ஹர்தீப் புரி, எஸ்எஸ் அலுவாலியா தான் அவர்கள்.

இந்த மூன்று பெயர்கள் மட்டுமல்லாமல், மேலும் நான்கு பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படலாம் என்கிறார்கள். அவை, ஆரீஃப் முகமது கான், நஜ்மா ஹெப்துல்லா, கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் ஆனந்திபென் படேல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com