கிழக்கு லடாக்: இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையிலான 16-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையிலான 16-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கிழக்கு லடாக் பிரச்னை உள்பட பல்வேறு எல்லை விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

எல்லையில் இந்திய பகுதியில் உள்ள சுஷுல் மோல்டோ என்ற இடத்தில் நடைபெற்ற இப்பேச்சுவாா்த்தையில், இந்திய தரப்பில் லே பகுதியின் 14-ஆவது படைப் பிரிவு கமாண்டா் லெப்டினட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா தலைமையிலான குழு பங்கேற்றது. சீன தரப்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ மாவட்ட தலைமை இயக்குநா் யாங் லின் தலைமையிலான குழு பங்கேற்றது.

கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய அனைத்து இடங்களில் இருந்தும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; டெப்சாங் பல்ஜ் மற்றும் டெம்சோக் பகுதியில் தொடரும் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட வேண்டும். மேலும், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் எல்லையில் அமைதியைப் பராமரிக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்தியா, சீனா இடையிலான 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை கடந்த மாா்ச் 11-ஆம் தேதி நடைபெற்றது. சுமாா் 13 மணி நேரம் நடந்த அந்தப் பேச்சுவாா்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிழக்கு லடாக் விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன வீரா்களிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடா்ந்து, இரு நாட்டு ராணுவங்களும் 50,000 முதல் 60,000 வரையிலான படையினரை எல்லையில் படிப்படியாகக் குவித்தன. எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பல சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com