அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி: நிர்மலா சீதாராமன் விளக்கம்

சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
அரிசி / கோதுமை (கோப்புப் படம்)
அரிசி / கோதுமை (கோப்புப் படம்)

சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி பைகளில் அடைக்கப்படாத அரிசி, பருப்பு, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில்  வரியை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பைகளில் அடைக்கப்பட்ட (பாக்கெட்) அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும், திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 

இதனால் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நடுத்தர, ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், உணவு தானியங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து சுட்டுரையில் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத, சீலிடப்படாத தானியங்களுக்கும் ஜிஎஸ்டி இல்லை. அவற்றிற்கு ஜிஎஸ்டி பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தெந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது சில்லறையாக பைகளில் அடைக்கப்படாமல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது. ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி பொருந்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com