
வைரலாகும் சோனியாவின் பழைய விடியோ
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத் துறை முன்பு, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று நேரில் ஆஜராகவிருக்கும் நிலையில், 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக ஜூலை 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு முன்பு கடந்த ஜூன் 23-ஆம் தேதி அவருக்கு அமலாக்கத்துறை இரண்டாவது சம்மனை அனுப்பியது. அப்போது, ‘கரோனாவுக்குப் பிந்தைய உடல் பாதிப்புகளிலிருந்து முழுமையாக குணமடையும் வரை விசாரணையில் ஆஜராவதிலிருந்து சில வாரங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று சோனியா காந்தி விடுத்த கோரிக்கை அடிப்படையில், விசாரணையை 4 வார காலத்துக்கு அமலாக்கத் துறை ஒத்திவைத்தது. இந்நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று அமலாக்கத் துறை முன்பு சோனியா ஆஜராகவிருக்கிறார்.
இதையும் படிக்க.. மகள்களைக் கொன்ற தாய்க்கு 'சோதனை அடிப்படையில் விடுதலை': முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
நான் இந்திராவின் மருமகள், யாருக்கும் அஞ்ச மாட்டேன். pic.twitter.com/3mnwqbv88s
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 21, 2022
இந்த நிலையில், நான் இந்திரா காந்தியின் மருமகள், யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்று கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தியாளர்களிடம் ஹிந்தியில் கூறிய விடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அப்போதும் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான கேள்வி ஒன்றுக்குத்தான் சோனியா இவ்வாறு பதிலளித்திருந்தார்.
இந்த விடியோ தற்போது சுட்டுரையில் காங்கிரஸ் தொண்டர்களால் வைரலாகி வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி என்ன?
காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். தற்போது சோனியா காந்தியிடம் விசாரணை தொடங்கவிருக்கிறது.