
கோப்புப் படம்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஹௌரா மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் பாஜக செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக் கருத்தினை எதிர்த்து இன்று (ஜூன் 9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தில்லிக்குச் சென்று போராடுமாறு மம்தா கூறினார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி பேசியதாவது, “ பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்து உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளில் பலர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பொதுமக்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். மேற்குவங்கத்தில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை. ஆளும் பாஜக தில்லியில் உள்ளது அங்கு சென்று போராடுங்கள். உத்தர பிரதேசத்துக்கு அல்லது குஜராத்திற்கு சென்று போராடுங்கள்” என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...