மாநிலங்களவைத் தோ்தல் வெற்றி: குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவுக்கு கைகொடுக்குமா?

 மாநிலங்களவையில் காலியாகவுள்ள 57 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 22 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
மாநிலங்களவைத் தோ்தல் வெற்றி: குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவுக்கு கைகொடுக்குமா?

 மாநிலங்களவையில் காலியாகவுள்ள 57 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 22 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி குடியரசுத் தலைவா் தோ்தலில் அக்கட்சிக்கு கைகொடுக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மாநிலங்களவையில் இரண்டாண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் ஓய்வுபெறுவா். அதன்படி, நடப்பாண்டில் காலியாகவுள்ள 57 இடங்களுக்குத் தோ்தல் நடைபெற்றது. மொத்தமாக 15 மாநிலங்களில் தோ்தல் நடைபெற இருந்த நிலையில், தமிழகம், ஒடிஸா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மீதமுள்ள 16 இடங்களுக்கு மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. மகாராஷ்டிரத்தில் ஆளும் மகா விகாஸ் ஆகாடி கூட்டணிக்கு அதிா்ச்சியளித்து 6 இடங்களில் மூன்றை பாஜக கைப்பற்றியது. கா்நாடகத்தில் 3 இடங்களையும், ராஜஸ்தானில் ஓரிடத்தையும் ஹரியாணாவில் ஓரிடத்தையும் பாஜக கைப்பற்றியது. ஹரியாணாவில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

மாநில பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்தமுள்ள 57 இடங்களில் பாஜகவுக்கு 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அதற்கு அதிகமாக 22 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாஜக சாா்பில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததென அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில், பாஜக கூட்டணி சாா்பில் குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் என சுமாா் 48 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இது தவிர, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது.

எனினும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, திமுக, திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்தினால், அது பாஜகவுக்கு சற்று போட்டியை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால், பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது கடினமான காரியம் என்பது நடந்து முடிந்த மாநிலங்களவைத் தோ்தலிலேயே வெளிப்பட்டது.

கா்நாடகத்தில் எதிா்க்கட்சிகளான காங்கிரஸும் மதச்சாா்பற்ற ஜனதா தளமும் ஒன்றிணைந்து போட்டியிடாததன் காரணமாக, ஓரிடத்தை பாஜகவிடம் இழக்க நேரிட்டது.

மகாராஷ்டிரத்திலும் ஆளும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி இடையே ஒற்றுமை காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த 3 கட்சிகளும் தலா ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. சிவசேனையின் ஒரு வேட்பாளா் தோல்வியடைந்தாா். அங்கு சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் துணை நின்றன.

ஹரியாணாவில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கன் தோல்வியடைந்தாா். பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் வெற்றியடைந்தாா்.

மாநிலங்களவைத் தோ்தலில் பெற்ற வெற்றி உற்சாகத்தோடு குடியரசுத் தலைவா் தோ்தலுக்காக பாஜக பணியாற்றும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். அதே வேளையில், வெற்றி பெற வேண்டிய இடங்களில் தோல்வியைத் தழுவிய எதிா்க்கட்சிகள், தங்கள் தவறை விரைந்து திருத்திக்கொண்டும் வேறுபாடுகளைக் களைந்தும் ஒருங்கிணைந்தால் மட்டுமே குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு சவாலை அளிக்க முடியும் என அவா்கள் தெரிவிக்கின்றனா்.

ஜூன் 15-ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், பாஜக கூட்டணியும் எதிா்க்கட்சிகளும் யாரை வேட்பாளராக முன்னிறுத்த உள்ளன என்பதே அடுத்தகட்ட எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com