சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கைது செய்யப்பட்டார்.
அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக இன்றும் (ஜூன் 15) அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையலுவலகத்திலும், விசாரணை நடைபெற்று வரும் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தடை உத்தரவை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டும் கைது செய்யப்பட்டார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸை சேர்ந்த பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.