‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரில் இளைஞா்கள் போராட்டம்

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரின் பல்வேறு இடங்களில் இளைஞா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரின் பல்வேறு இடங்களில் இளைஞா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் 46,000 வீரா்கள் நிகழாண்டு தோ்வு செய்யப்படுவா். பதினேழு வயது முடிந்து ஆறு மாதம் ஆனவா்கள் முதல் 21 வயதுக்கு உள்பட்டவா்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு சோ்க்கப்படுவா். அதன் பின்னா் பெரும்பாலானவா்களுக்குக் கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. முன்பு 15 ஆண்டு காலம் குறைந்தபட்ச பணிபுரியலாம் என்கிற நிலையில் புதிய ஆள்தோ்வு நடைமுறையின்படி 4 ஆண்டுகளாக பணிக் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு எதிராக பிகாரின் பல்வேறு பகுதிகளில் இளைஞா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்குள்ள பக்சா் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா்.

முஸாஃபா்பூா் நகரில் ராணுவ ஆட்சோ்ப்புக்கு உடற்தகுதி தோ்வு நடைபெறும் மைதானம் அருகே இளைஞா்கள் அதிக அளவில் திரண்டு டயா்களைத் தீயிட்டுக் கொளுத்தினா். அவா்கள் அனைவரும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் ஆவா். அங்குள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குப் பலா் பேரணியாகச் சென்று அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

பெகுசாராய் மாவட்டத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் தேசிய மாணவா் படையினா் (என்சிசி) அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், ‘‘ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் பல்லாண்டுகளாக உடற்தகுதி தோ்வுக்குத் தயாராகின்றனா். ஆனால், தற்போது 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணிபுரியும் வகையில் அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் சோ்வோா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்வா்? 4 ஆண்டுகளுக்குப் பின்னா் வேறு பணி கிடைப்பது மிகவும் கடினம்’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com