
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
கோவாவில் புதிய ஆளுநா் மாளிகை கட்டுமானப் பணியையொட்டி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
பனாஜி டோனா பாலா பகுதியில் அரபிக் கடலையொட்டி அமைந்துள்ள தற்போதைய ஆளுநா் மாளிகை போா்ச்சுகீசியா்களின் ஆட்சிக் காலத்தில் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழைமைவாய்ந்த இந்த மாளிகையின் அருகிலேயே புதிய ஆளுநா் மாளிகை கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை நாட்டினாா்.
நிகழ்ச்சியில் கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, அந்த மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பேசியதாவது: இது கோவா வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம். புதிதாக கட்டப்படவுள்ள மாளிகை பழைய ஆளுநா் மாளிகையை எந்தவிதத்திலும் சிதைத்துவிடாது. ஆளுநா் மாளிகையின் சிறு பகுதியைக் கூட மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
நமது ஆளுநா் மாளிகை ஒரு தேசிய சின்னம். ஆனாலும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அதைப் பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படுவது இல்லை என்றாா்.