மேக்கேதாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் அர்த்தமற்றது : பசவராஜ் பொம்மை

மேக்கேதாட்டு திட்டத்தில் கர்நாடகத்திற்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் எனவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பு சட்டவிரோதமானது என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மேக்கேதாட்டு திட்டத்தில் கர்நாடகத்திற்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் எனவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பு சட்டவிரோதமானது என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, “மேக்கேதாட்டு விவகாரத்தில் ஆலோசனை நடத்தவும் மற்றும் முடிவு எடுக்கவும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு உரிமை உள்ளது. தமிழகம் கூறும் அனைத்து விஷயங்களுக்கும் எங்களுக்கு பதிலளித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மேக்கேதாட்டு திட்டத்தை உச்சநீதிமன்றமும் நிறுத்தி வைக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மைக் குழுவிடமும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. அடுத்த வாரம் மற்றொரு சந்திப்புக் கூட நடக்கலாம். நாங்கள் எங்களுடைய தரப்பில் இருந்து இந்தத் திட்டத்தில் உறுதியாக உள்ளோம். இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்து விடும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்”.என்றார்.


செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த விவகாரத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்றார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பிரதமரிடம் இந்த விவகாரத்தில் தலையிட்டு காவிரி நதிநீர் மேலாண்மைக் கூட்டத்தினை அடுத்த சந்திப்பில் ஆலோசிக்கக் கூடாது என கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் இந்த செயலுக்கு  கண்டனம் தெரிவித்தார்.

கர்நாடக அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மேக்கேதாட்டு அணைத் திட்டம் அந்த மாநிலத்தின் மின்சாரம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இந்த அணை கர்நாடக மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள கனபுரா என்ற பகுதியில் அமைய உள்ளது. அண்டை மாநிலமான தமிழகம் இந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தினை வெற்றிகரமாக கர்நாடக அரசு செயல்படுத்தும் பட்சத்தில் பெங்களூரும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும். மேலும், 400 மெகா வாட் மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த திட்டம் சுமார் ரூ.9,000  கோடி மதிப்பில் அமைய உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com