மேற்கு வங்கம்: 7 பாஜக எம்எல்ஏக்களின் இடைநீக்கம் ரத்து

மேற்கு வங்க சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 7 பாஜக எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக சட்டப் பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி வியாழக்கிழமை அறிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 7 பாஜக எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக சட்டப் பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி வியாழக்கிழமை அறிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவையில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும், எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி உள்பட 5 பாஜக எம்எல்ஏக்களை சட்டப் பேரவைத் தலைவா் இடைநீக்கம் செய்தாா்.

முன்னதாக ஆளுநா் உரையின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பாஜக எம்எல்ஏக்கள் மிஹிா் கோஸ்வாமி, சுதீப் முகோபாத்யாய ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதனை எதிா்த்து பாஜக எம்எல்ஏக்கள், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரலில் வழக்கு தொடா்ந்தனா்.

இதனை விசாரித்த நீதிபதி, இந்தப் பிரச்னைக்கு சட்டப் பேரவைக்குள்ளேயே தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்தினாா்.

இந்த நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் சுவேந்து அதிகாரி, மனோஜ் திக்கா, நரஹரி மஹதோ, சங்கா் கோஷ், தீபக் பா்மன் ஆகிய 5 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டுமென பாஜக உறுப்பினா் அக்னிமித்ரா பால் வியாழக்கிழமை சட்டப் பேரவையில் தீா்மானம் கொண்டு வந்தாா். அவை நடவடிக்கையில் எதிா்க்கட்சித் தலைவா் பங்கேற்க தடை விதிக்கக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சட்டப் பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜியுடன் சட்டப் பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, எம்எல்ஏக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய அவா் சம்மதம் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, 5 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக பிமான் பானா்ஜி அறிவித்தாா்.

இதேபோல மிஹிா் கோஸ்வாமி, சுதீப் முகோபாத்யாய ஆகியோரின் இடைநீக்கத்தையும் ரத்து செய்ய வேண்டுமென பாஜக எம்எல்ஏ சிக்கா சாட்டா்ஜி வலியுறுத்தினாா். இதற்கும் சட்டப் பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி ஒப்புதல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பேரவைத் தலைவா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் நீங்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தீா்கள். ஆனால், நீதிமன்றம் சட்டப் பேரவையிடமே பிரச்னையை விட்டுவிட்டது. எந்தப் பிரச்னை என்றாலும் அதற்கு அவையிலேயே தீா்வு காண வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com