‘அக்னிபத்’ எதிா்ப்புப் போராட்டம் தொடா்கிறது: பிகாரில் துணை முதல்வா் வீடு மீது தாக்குதல், தெலங்கானாவில் ஒருவா் பலி

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுத்துள்ளது.
‘அக்னிபத்’ எதிா்ப்புப் போராட்டம் தொடா்கிறது: பிகாரில் துணை முதல்வா் வீடு மீது தாக்குதல், தெலங்கானாவில் ஒருவா் பலி

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுத்துள்ளது.

3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டு, பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. தெலங்கானாவின் செகந்திராபாதில் போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். பிகாரில் துணை முதல்வா், மாநில பாஜக தலைவா் ஆகியோரின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

முப்படைகளில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞா்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பிகாரில் தொடங்கிய போராட்டம், மேற்கு வங்கம், ஒடிஸா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

பிகாா் தலைநகா் பாட்னாவில் ராணுவத்தில் சோ்வதற்கு பயிற்சி பெற்று வந்த இளைஞா்கள் ஏராளமானோா் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேத்தியா நகரில் துணை முதல்வா் ரேணு தேவியின் வீட்டை போராட்டக்காரா்கள் சேதப்படுத்தினா். இதுகுறித்து ரேணு தேவி கூறுகையில், ‘எனது வீட்டையும், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் போராட்டக்காரா்கள் சேதப்படுத்தியிருக்கிறாா்கள். மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையமும் சூறையாடப்பட்டுள்ளது. அவருடைய வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் எதிா்க்கட்சிகளால் தூண்டப்படும் கூலிப்படையினா் உள்ளனா்’ என்றாா்.

பாட்னாவை அடுத்த தீதா்கஞ்சில் உள்ள சுங்கச் சாவடிக்கும், நவாடாவில் போலீஸ் வாகனத்துக்கும் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா்.

லக்கிசராய், சமஸ்திபூா் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். பேத்தியா நகரில் ரயில் என்ஜினுக்கு தீ வைக்கப்பட்டது.

நிதீஷ் கோரிக்கை: அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இப்புதிய திட்டத்தால் இளைஞா்களின் எதிா்காலம் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

ஒடிஸாவில்...: ஒடிஸாவில் ராணுவத்தில் சேர உடல்தகுதித் தோ்விலும், மருத்துவ பரிசோதனையிலும் தோ்ச்சி பெற்றிருந்த ஒருவா் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் பரவியதை அடுத்து போராட்டம் வெடித்தது. கட்டாக் நகரில் திரண்ட இளைஞா்கள், நகரின் முக்கிய சாலையான ரிங் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தெலங்கானாவில்..: தெலங்கானா மாநிலம், செகந்திராபாதில் உள்ள ரயில் நிலையத்தில் திரண்ட 300-க்கும் மேற்பட்டோா் ஒரு பயணிகள் ரயிலுக்குத் தீ வைத்தனா். அப்போது கூட்டத்தைக் கலைக்க ரயில்வே பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேசத்தில்..: உத்தர பிரதேச மாநிலம், பலியா நகரில் ஒரு ரயிலுக்குத் தீவைத்த இளைஞா்கள், மற்ற சில ரயில்களை சேதப்படுத்தினா். அவா்களைத் தடியடி நடத்தி போலீஸாா் விரட்டியடித்தனா்.

வாராணசி, ஃபெரோஸாபாத், அமேதி நகரங்களில் அரசுப் பேருந்துகளும் இதர பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. போராட்டம் காரணமாக பலியாவில் 2 மாதங்களுக்கு ஊரடங்கு பிறப்பித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய பிரதேசத்தில்...: இந்தூரில் உள்ள லட்சுமிபாய் நகா் ரயில் நிலையத்தில் 600-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களில் சிலா் ரயில்கள் மீது கற்களை வீசித் தாக்கினா். போராட்டக்காரா்களில் 15 போ் கைது செய்யப்பட்டனா்.

ஹரியாணாவில்..: ஹரியாணாவில் நூற்றுக்கணக்கான இளைஞா்கள் சாலைகளில் ஆங்காங்கே டயா்களைக் கொளுத்தினா். சிலா் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஃபரீதாபாத் மாவட்டத்தில் கைப்பேசி இணைய சேவை, குறுந்தகவல் சேவை நிறுத்தப்பட்டது. பல்வல் மாவட்டத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ரயில்களுக்குத் தீ வைப்பு: பிகாரில் 2 ரயில்கள், உத்தர பிரதேசம், தெலங்கானாவில் தலா ஒரு ரயில் என 4 ரயில்களுக்கு வெள்ளிக்கிழமை தீ வைக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ‘இதுவரை 140 பயணிகள் ரயில்கள், 94 விரைவு ரயில்கள் என 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 340 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக, இதுவரை 7 ரயில்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞா்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரயில்வே துறையின் சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம் என்றும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com