அக்னிபத்துக்கு எதிர்ப்பு: வடக்கே அதிகம் எரிவது ஏன்? 

படைகளுக்கு ஆள்சேர்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனை எதிர்த்து வட இந்திய மாநிலங்களில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அக்னிபத்துக்கு எதிர்ப்பு: வடக்கே அதிகம் எரிவது ஏன்?
அக்னிபத்துக்கு எதிர்ப்பு: வடக்கே அதிகம் எரிவது ஏன்?

படைகளுக்கு ஆள்சேர்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனை எதிர்த்து வட இந்திய மாநிலங்களில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தென்னிந்திய மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் கூட, வட இந்திய மாநிலங்களில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகளே முடங்கும் வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்னிபத் திட்டத்துக்கு வடக்கு மாநிலங்களில் மட்டும் இந்த அளவுக்கு எதிர்ப்புக் குரல் எழுவது ஏன்? என்ன காரணம்? பதிலாகக் கிடைத்திருப்பது இந்த புள்ளிவிவரம்தான்.

ஓராண்டில் நாடு முழுவதும் படைகளுக்கு ஆள் சேர்ப்பில், நான்கில் ஒருவர் பஞ்சாப், ஹரியாணா, இமாசலம், சண்டிகர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 2019 - 20ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ராணுவ ஆள்சேர்ப்புக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 18,798 பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது ஒட்டுமொத்தமாக தேர்வான 78,692 பேரில் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 24 சதவீதம் பேர். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இதே 219 - 20ஆம் ஆண்டில் ஒரே ஒரு மாநிலத்திலிருந்து 8,425 பேர் படைகளுக்கு தேர்வாகியுள்ளனர். அந்த மாநிலம் எது என்று பார்த்தால், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து அதிகம் பற்றி எரியும் உத்தரப்பிரதேசம்தான். பிகாரிலிருந்து 4,559 பேர் தேர்வாகியுள்ளனர். 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக ராணுவத்துக்கு ஆள்சேர்ப்புப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் போனதால், சுமார் 37,000 பேர் ராணுவத்தில் இணையும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த கனவையும் கலைக்கும் வகையில் அக்னிபத் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டதே, இந்த அளவுக்கு எதிர்ப்பு, போராட்டம், எரிப்பு என்ற நிலையை எட்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, ஆண்டுதோறும் படைகளுக்கு ஆள் எடுக்கும் போது இந்த மாநிலங்களிலிருந்து ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் பலம் ஒரு பெரிய எண்ணிக்கையில், தொடர்ச்சியாக அதிகரித்தே வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டங்களின் நிலவரம்
மத்திய அரசின் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. 

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இதுவரை 387 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாநில காவல்துறையினா் தெரிவித்தனா். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் அக்னிபத் போராட்டங்கள் தொடா்பாக கடந்த சில நாட்களாக நிகழ்ந்த வன்முறை தொடா்பாக இதுவரை 804 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்ட சம்பவங்கள் குறைந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

பஞ்சாபில்...: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாபில் சண்டீகா்-உனா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டக்காரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் சுமாா் ஒரு மணி நேரம் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை மாநில காவல் துறையினா் கைது செய்தனா். போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 483 ரயில்களின் சேவையை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com