அக்னிபத் வன்முறை: உ.பி.யில் 387 போ் கைது

உத்தர பிரதேசத்தில் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் இதுவரை 387 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
அக்னிபத்-வன்முறை-உபியில்-387-போ்-கைது
அக்னிபத்-வன்முறை-உபியில்-387-போ்-கைது

உத்தர பிரதேசத்தில் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் இதுவரை 387 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

மத்திய அரசின் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. மாநிலத்தில் இதுவரை 387 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாநில காவல்துறையினா் தெரிவித்தனா். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு எதிராகக் காவல் துறையினா் சில இடங்களில் தடியடி நடத்தினா். தியோரியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசித் தாக்கினா். அருகில் உள்ள எரிவாயு நிலையத்தையும் தாக்கினா். இந்தச் சம்பவம் தொடா்பாகக் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாரில் அக்னிபத் போராட்டங்கள் தொடா்பாக கடந்த சில நாட்களாக நிகழ்ந்த வன்முறை தொடா்பாக இதுவரை 804 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்ட சம்பவங்கள் குறைந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

பஞ்சாபில்...: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாபில் சண்டீகா்-உனா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டக்காரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் சுமாா் ஒரு மணி நேரம் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரள காவல் துறை எச்சரிக்கை: கேரளத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஜூன் 20-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள காவல் துறை எச்சரித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றங்கள், மின்துறை அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில காவல்துறைத் தலைவா் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளாா்.

குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை மாநில காவல் துறையினா் கைது செய்தனா். போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 483 ரயில்களின் சேவையை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com