
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹ அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மம்தா தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹ தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: வெங்கைய நாயுடுவுடன் பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு
யார் இந்த யஷ்வந்த் சின்ஹ?
பிகார் மாநிலம் பாட்னாவில் 1937ல் பிறந்த யஷ்வந்த் சின்ஹ பொலிட்டிகல் சயின்ஸ் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். சிறிது காலம் பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
அதன் பின் குடிமைப் பணிகளுக்கானத் தேர்வில் வெற்றிபெற்று ஆட்சியராக 1960 ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகாலம் பல்வேறு பதவிகளை வகித்தார். குறிப்பாக, 4 ஆண்டுகாலம் மாவட்ட நீதிபதியாகவும் 1971ஆம் ஆண்டு முதல் 1973 வரை ஜெர்மனிக்கான இந்திய தூதரகத்தில் முதன்மை செயலராகவும் பின்னர் ஜெர்மனிக்கான இந்திய தூதரக தலைவராகவும் பணியாற்றினார்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ
இறுதியாக, 1984-ல் போக்குவரத்து அமைச்சகத்தில் கூடுதல் செயலராக பணியாற்றிக்கொண்டிருந்தபோது பணியை ராஜிநாமா செய்துவிட்டு ஜனதா கட்சியில் இணைந்தார்.
1986-ல் ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1988-ல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் 1989ல் ஜனதாதளம் கட்சி உருவானபோது அதன் பொதுச் செயலாளரானார். சந்திரசேகர் அமைச்சரவையில் 1990-91ல் இந்தியாவின் நிதியமைச்சராக பணியாற்றினார்.
பின்னர், 1996ல் பாஜகவில் இணைந்து தேசிய செய்தித் தொடர்பாளரான யஷ்வந்த் சின்ஹ பாஜக சார்பில் 1998, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஹசாரிபாக் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் மார்ச் 1998ல் நிதி அமைச்சராகவும் அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: பாரதிய ஜனதா அணி வேட்பாளர் வெங்கைய நாயுடு?
பாஜக தலைமையில் ஏற்பட்ட மாற்றத்தில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட யஷ்வந்த் சின்ஹ 2021-ல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியில் துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.
குடும்பம்..
யஷ்வந்த் சின்ஹவின் மனைவி எழுத்தாளர் நீலிமா சின்ஹ. இவர்களுக்கு ஷர்மிளா என்கிற மகளும் ஜெயந்த் சின்ஹா மற்றும் சுமந்த் சின்ஹா ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ஜெயந்த் சின்ஹா பாஜகவின் மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...