தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவுக்கு ‘இஸட் பிளஸ்’’ பிரிவு பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) போட்டியிடுவார் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றின் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
குடியரசுத் தலைவராக முர்மு தேர்வானால் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
இந்நிலையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட் பிளஸ்’’(z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.