
கோப்புப்படம்
1975-இல் அவசர நிலையின்போது ஜனநாயகத்தை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இன்று 90-வது மன் கி பாத் நிகழ்ச்சி. இதில் அவசர நிலை காலத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
பிரதமர் உரை:
"அவசர நிலை காலத்தில் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இத்துடன் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ன் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கான உரிமைகளும் பறிக்கப்பட்டன. அந்த நேரத்தில் நீதிமன்றங்கள், அரசியலமைப்பின் அமைப்புகள், ஊடகங்கள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஜனநாயகத்தை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிக்க | ஜெர்மனியில் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
மிகவும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டது. ஒப்புதல் இல்லாமல் எதையும் வெளியிட முடியாது. பிரபல பாடகர் கிஷோர் குமார் அரசைப் பாராட்ட மறுத்தபோது, அவர் தடை செய்யப்பட்டதும், ரேடியோவில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.
ஆயிரக்கணக்கான கைதுகள், லட்சக்கணக்கானோர் மீது கொடுமைகள் ஏவப்பட்டது என பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தின் மீது இந்தியர்களுக்கு இருந்த நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.
பல நூறாண்டுகளாகவே ஜனநாயகத்தின் விழுமியங்கள் நம்முள் ஊறிப்போயுள்ளன. நம் நரம்புகளில் ஓடும் ஜனநாயக உணர்வே இறுதியில் வெற்றி பெற்றது. சர்வாதிகார போக்கை ஜனநாயகத்தின் வழியில் வீழ்த்தியதற்கான உதாரணத்தை இந்த உலகில் வேறெங்கும் கண்டறிவது மிகவும் கடினமானது.
அவசர நிலை காலத்தில் நாட்டு மக்களின் போராட்டத்தைப் பார்த்தவனாகவும், அதில் பங்கேற்றவனாகவும் இருந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இன்று நாடு 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் நாம் அவசர நிலை காலத்தின் இருண்ட காலத்தை மறக்கக் கூடாது. வரும் தலைமுறையினரும் இதை மறக்கக் கூடாது" என்றார் பிரதமர்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஜூன் 25, 1975-இல் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பிறகு மார்ச் 21, 1977-இல் அது திரும்பப் பெறப்பட்டது.