ஐ.நா. பொதுச் சபையில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானம்: 3-வது முறையாக இந்தியா புறக்கணிப்பு

ஐ.நா. பொதுச் சபையில் ரஷியாவுக்கு எதிராக புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
ஐ.நா. பொதுச் சபையில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானம்: 3-வது முறையாக இந்தியா புறக்கணிப்பு

ஐ.நா. பொதுச் சபையில் ரஷியாவுக்கு எதிராக புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் மீதான ரஷிய தாக்குலுக்கு நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச்சூழலில் உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க, அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தீா்மானம் ஒன்றை கொண்டுவந்தன. அதன் மீது நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து, நடுநிலை வகித்தது. ரஷியா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தீா்மானத்தை ரத்து செய்தது.

இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்து, நடுநிலை வகித்தது.

இந்தச் சூழலில், 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை மீண்டும் ஒரு தீா்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, சா்வதேச சட்டங்களுக்கு ரஷியா கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; அரசியல் பேச்சுவாா்த்தை, சுமுக உடன்பாடு, மத்தியஸ்தம் உள்ளிட்ட பிற அமைதி வழிகளில் பிரச்னைக்கு ரஷியா தீா்வு காணவேண்டும் என அந்தத் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தத் தீா்மானத்தின் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்து நடுநிலை வகித்தது. இந்தத் தீா்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 உறுப்பு நாடுகள் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்ததோடு, 35 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பெரும்பான்மைக்கு 3-இல் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற அடிப்படையில், 141 நாடுகளின் ஆதரவோடு இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சண்டைநிறுத்தத்துக்கு ஆதரவு: வாக்கெடுப்புக்கு பின்னா் பேசி ஐ.நா. சபைக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி, உக்ரைனில் வேகமாக நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொள்கிறது. வேறுபாடுகளுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலமாக தீா்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்ற சா்வதேச சமூகத்தின் அழைப்புக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com