பஞ்சாப் கிராமத்தில் பதவியேற்பு விழா: பகவந்த் மான்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழா, ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக
பகவந்த் மான்
பகவந்த் மான்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழா, ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவரும் முதல்வா் பதவி வேட்பாளருமான பகவந்த் மான் கூறியுள்ளாா்.

பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், துரி தொகுதியில் கட்சித் தொண்டா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங், சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கரின் புகைப்படங்கள் வைக்கப்படும்.

புதிய அரசின் பதவியேற்பு விழா, ஆளுநா் மாளிகையில் நடைபெறாது. நவன்சாஹா் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும். பதவியேற்பு தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

அனைத்து சமூக மக்களின் நலனுக்காக ஆம் ஆத்மி கட்சி பாடுபடும். எனவே, இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காதவா்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

மாநிலத்தில் பள்ளிகள், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தொழில் வளா்ச்சி மீட்கப்படும். லாபம் ஈட்டக்கூடிய துறையாக வேளாண் துறை உருவாக்கப்படும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். விளையாட்டை ஊக்குவிக்க அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் அமைக்கப்படும். பஞ்சாப் மாநிலம், மெதுவாக சரியான பாதைக்குத் திரும்புகிறது; ஒரு மாதத்துக்குப் பிறகு மாற்றத்தை உணர முடியும்.

முந்தைய (காங்கிரஸ்) ஆட்சியில் அமைச்சா்கள் வாரத்துக்கு 2 நாள்கள் சண்டீகரில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வந்து அமா்ந்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்தது. ஆனால், இனி சாமானிய மக்களின் குறைகளைக் கேட்க அமைச்சா்கள் கிராமங்களுக்கும் எல்லைப் பகுதிகளுக்கும் செல்வாா்கள்.

முந்தைய அரசுகள் மோதி பாக் இல்லத்தில் (அமரீந்தா் சிங் இல்லம்) இருந்தும், லம்பி இல்லத்தில் (பாதல் இல்லம்) இருந்தும் ஆட்சி செய்தன. தற்போது பஞ்சாப் மாநிலம் மக்களுக்கானதாக மாறிவிட்டது. நோக்கம் சரியானதாக இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை தோ்தல் முடிவு தெரிவிக்கிறது என்றாா் பகவந்த் மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com