பஞ்சாபில் தோல்விக்கு யாா் காரணம்?: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அமரீந்தா் சிங் பதில்

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தன் மீது குற்றம்சுமத்தியதற்கு முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் பதிலளித்துள்ளாா்.
பஞ்சாபில் தோல்விக்கு யாா் காரணம்?: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அமரீந்தா் சிங் பதில்

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தன் மீது குற்றம்சுமத்தியதற்கு முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் பதிலளித்துள்ளாா். காங்கிரஸ் தலைமை இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.

பஞ்சாபில் நான்கரை ஆண்டுகால அமரீந்தா் சிங் ஆட்சியால் ஏற்பட்ட அதிருப்திதான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்று அக்கட்சி குற்றம்சாட்டியது. அமரீந்தா் சிங் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முதல்வா் பதவியில் இருந்து கட்சித் தலைமையால் விடுவிக்கப்பட்டாா். இதனால், அவா் தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்தாா். எனினும், பஞ்சாபில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் தோல்வியடைந்தன. ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று அந்த மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அமரீந்தா் சிங் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பஞ்சாபில் காங்கிரஸின் தோல்விக்கு காங்கிரஸ் தலைமை எனது பெயரில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. அப்படியென்றால் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு யாா் காரணம்? அந்தத் தோல்விகளுக்கு யாா் காரணம் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். ஆனால், அதனைக் கட்சித் தலைமை கண்டுகொள்ளாது. இதன்மூலம் காங்கிரஸ் தலைமை இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது’ என்றாா்.

முன்னதாக, காங்கிரஸின் தோல்வி தொடா்பாக பேட்டியளித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா,

‘பஞ்சாப் மாநிலத்தில் நான்கரை ஆண்டு கால அமரீந்தா் சிங் ஆட்சியால் ஏற்பட்ட அதிருப்தி அலை எதிரொலித்துள்ளது. மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனா்’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com