
காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(கோப்புப்படம்)
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதனிடையே, பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸின் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பதவி, தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருப்பதாவது:
ஐந்து மாநிலங்களில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தியோ அல்லது காந்தி குடும்பத்தினர் மட்டுமே பொறுப்பு இல்லை என சோனியா காந்தியிடம் நாங்கள் அனைவரும் தெரிவித்தோம். தோல்விக்கு அனைத்து மாநிலத் தலைவர்களும், எம்.பி.க்களும் தான் பொறுப்பு.
சோனியா காந்தி மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர், ராஜிநாமா செய்வது குறித்து எந்த கேள்வியும் இல்லை.
கட்சியை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம். எங்கள் சித்தாந்தத்தை வலுபடுத்தி, வருகின்ற தேர்தல்களில் முன்பைவிட சிறப்பாக செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...