பாஜக கூட்டத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பாராட்டிய பிரதமர் மோடி!

பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 
'தி காஷ்மீரி ஃபைல்ஸ்' படக்குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி 
'தி காஷ்மீரி ஃபைல்ஸ்' படக்குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி 

பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

நாடாளுமன்றக் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு நேற்று(திங்கள்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா,  பாஜக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். உண்மையை வெளிப்படுத்தும் இதுபோன்ற படங்கள் அதிகமாக வர வேண்டும் என்றும் ஆனால் இதனை இழிவுபடுத்த பிரசாரம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 

'இந்த திரைப்படம் மறைக்கப்பட்ட உண்மையை எடுத்துரைக்கிறது. கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசும் மக்கள், கடந்த ஐந்தாறு நாள்களாக கொந்தளித்து வருகின்றனர். உண்மை மற்றும் கலையின் அடிப்படையில் படத்தை விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, படத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையை வெளிப்படுத்தும் இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும்' என்று கூறியுள்ளார். 

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990ல் காஷ்மீர் ல் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டதை மையமாகக் கொண்டது. இயக்குநர் அக்னிஹோத்ரி இதனை எழுதி இயக்கியிருக்கிறார். அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படக்குழுவினரை வரவழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

பாஜக ஆளும் ஹரியாணா, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த படம் வரி விலக்கு பெற்றுள்ளது. 

அதேநேரத்தில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்குகளை அரசு மிரட்டுவதாக பாஜக எம்எல்ஏ ஒருவர் குற்றம்ச்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com