
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் ஊரான காத்கா் காலனில் நேற்று நடைபெற்ற விழாவில், பஞ்சாப் முதல்வராக, ஆம் ஆத்மியின் பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார். பகவந்த் மானுக்கு பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், பஞ்சாப் எம்எல்ஏக்கள் ஆகியோா் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்தவாறு கலந்துகொண்டனா். பெண்கள் மஞ்சள் துப்பட்டாவுடன் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்பு ஒருநாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்ப ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகவந்த் மான் ஏற்கெனவே ஜலந்தரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் ஹர்பஜன் சிங்கிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பஞ்சாபில் விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் விளையாட்டுத் தரத்தை உயர்த்துவதற்கு ஹர்பஜன் பணியாற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே பகவந்த் மான் கூறி வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
Congratulations to @AamAadmiParty and My friend #BhagwantMann on Becoming our New Chief minister .. great to hear that he will be taking oath as the new CM in Bhagat Singh's village Khatkarkalan, what a picture…this is a proud moment for Mata ji pic.twitter.com/k46DNr6Pjz
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 10, 2022
முன்னதாக பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆம் ஆத்மி கட்சிக்கும் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள எனது நண்பர் பகவந்த்மானுக்கு வாழ்த்துகள். பகத் சிங்கின் ஊரான காத்கா் காலனில் அவர் பதவியேற்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெற்றிக்குப் பின்னர், தொண்டர்கள் சந்திப்பின்போது, பகவந்த் மானை அவரது தாயார் கண்ணீர் மல்க கட்டியணைத்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'அம்மாவுக்கு இது பெருமையான தருணம்' என்று பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 3ல் இருந்து 8 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றாா்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...