
பெங்களூரு சிவாஜி நகரில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெங்களூருவில் முஸ்லிம் அமைப்பினர் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என்று அம்மாநில அரசு தடை விதித்ததையடுத்து அங்கு பெரும் சர்ச்சை போராட்டங்கள் வெடித்தன.
இதுதொடர்பான வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம், வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்திருந்த சீருடை உத்தரவு செல்லும் என செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கம் அல்ல என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதனிடையே, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரி பெங்களூருவில் முஸ்லிம் அமைப்பினர் இணைந்து இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர். அத்தியாவசியக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வகுப்பறைகளில் ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...