
கோப்புப்படம்
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹார்திக் படேல், கட்சித் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், தனது ட்விட்டர் பக்க குறிப்பிலிருந்து காங்கிரஸை நீக்கியுள்ளார்.
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக உள்ள ஹார்திக் படேல் பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த காலங்களில் பாஜக முடிவுகளை வரவேற்ற அவரது கருத்துகளும் இதற்கு வலு சேர்த்தன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை அவர் வரவேற்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும் வரவேற்றார்.
இதையும் படிக்க | பசுமை, நிலைத்தன்மை வளர்ச்சியில் ஒப்பந்தம்: இந்தியா, ஜெர்மனி பிரதமர்கள் கையெழுத்து
கடந்த மாதம் அவர் ஒருமுறை பேசுகையில், "நான் ரகுவன்ஷி குடும்பத்திலிருந்து வந்தவன். என்னிடம் ஹிந்துத்வா உள்ளது. நாங்கள் ஆயிரம் ஆண்டு காலமாக ஹிந்துத்வாவுடன்தான் உள்ளோம்" என்றார்.
இதுபோன்ற அவரது பேச்சுகள் அவர் பாஜகவில் இணையப்போவதாக சந்தேகத்தை எழுப்பின. இதனிடையே, குஜராத்தில் கட்சியைப் பலப்படுத்தத் தொடங்கியிருக்கும் ஆம் ஆத்மியும் அவருக்கு அழைப்பு விடுத்தது.
இதுபற்றி ஹார்திக் படேல் கூறுகையில், "நான் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக நீண்ட நாள்களாக செய்திகள் பரவி வருகின்றன. எனக்கு பாஜகவில் இணையும் திட்டம் எதுவும் இல்லை. சமீபத்தில் பாஜக எடுத்த அரசியல் முடிவுகளை வரவேற்றேன்" என்றார். மேலும் கட்சியின் மாநிலத் தலைமை மீது அதிருப்தி இருப்பதாகவே அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்க சுயகுறிப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கியுள்ளார் ஹார்திக் படேல். இதனால், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது பற்றிய சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.