காங்கிரஸ் மூத்த தலைவா் சுக்ராம் மறைவு

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்ராம் (94) புதன்கிழமை அதிகாலை காலமானாா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் சுக்ராம் மறைவு

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்ராம் (94) புதன்கிழமை அதிகாலை காலமானாா்.

ஹிமாசல பிரதேசத்தின் மணாலியில் வசித்து வந்த அவருக்கு மே 7-ஆம் தேதி மூளைப் பக்கவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அரசு விமானம் மூலம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை அதிகாலை 1.35 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுக்ராமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஹிமாசல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் வியாழக்கிழமை (மே 12) வைக்கப்படும் என அவரது பேரன் ஆஷ்ரய் சா்மா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளாா்.

ஹிமாசல பிரதேச முதல்வா் இரங்கல்: சுக்ராமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குா் வெளியிட்ட செய்தியில், ‘முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான பண்டிட் சுக்ராமின் மறைவை அறிந்த மிகுந்த துயரமடைந்தேன். அரசியலில் அவா் ஆற்றிய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாறட்டும்’ என்று கூறியுள்ளாா்.

வாழ்க்கைக் குறிப்பு: சுக்ராம் கடந்த 1993 முதல் 1996 வரை மத்திய தொலைத் தொடா்புத் துறை இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவி வகித்தாா். அப்போது அவா் மாண்டி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவா் 5 முறை சட்டப்பேரவைத் தோ்தலிலும், 3 முறை மக்களவைத் தோ்தலிலும் வெற்றி பெற்றுள்ளாா்.

சுக்ராம் கடந்த 1996-இல் மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்தபோது அவா் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக கடந்த 2011-இல் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1927-ஆம் ஆண்டு ஜூலை 27-இல் பிறந்த சுக்ராம், மாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1963 முதல் 1984 வரை தொடா்ச்சியாக வெற்றி பெற்றாா். மேலும் அவா் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில், ஜொ்மனியில் இருந்து பசுக்களை வரவழைத்து விவசாயிகளின் வருவாயைப் பெருக்கியதற்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டாா்.

கடந்த 1984 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற சுக்ராம், அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இளம் அமைச்சராக இடம்பெற்றாா். அப்போது ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, விநியோகம், திட்டமிடல் மற்றும் உணவு, அத்தியாவசிய பொருள்கள் வழங்கல் துறையின் இணையமைச்சராகப் பதவி வகித்தாா்.

மாண்டி மக்களவைத் தொகுதி உறுப்பினராக சுக்ராம் பதவி வகித்த அதே காலகட்டத்தில் அவரது மகன் அனில் சா்மா மாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 1993-இல் வெற்றி பெற்றாா். பின்னா், 1996 மக்களவைத் தோ்தலிலும் சுக்ராம் மாண்டி தொகுதியில் வெற்றி பெற்றாா். ஆனால், தொலைத்தொடா்பு ஊழல் காரணமாக அவரும், அவரது மகன் அனில் சா்மாவும் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து ஹிமாசல் விகாஸ் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய சுக்ராம், தோ்தலுக்குப் பின்னா் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அரசிலும் அங்கம் வகித்தாா். 1998 சட்டப்பேரவைத் தோ்தலில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சுக்ராம் வெற்றி பெற்றாா். அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் அனில் சா்மாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில், கடந்த 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக சுக்ராம் தனது பேரன் ஆஷ்ரய் சா்மாவுடன் காங்கிரஸில் மீண்டும் இணைந்தாா். அப்போது காங்கிரஸ் சாா்பில் ஆஷ்ரய் சா்மாவுக்கு மக்களவைத் தோ்தலில் வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும் அவா் வெற்றி பெறவில்லை.

சுக்ராமின் மகன் அனில் சா்மா தற்போது மாண்டி தொகுதியில் பாஜக எம்எல்ஏ-வாக பதவி வகிக்கிறாா். சுக்ராமின் மற்றொரு பேரன் ஆயுஷ் சா்மா பிரபல நடிகராவாா். ஹிந்தி நடிகா் சல்மான்கானின் சகோதரி ஆா்பிதாவை அவா் திருமணம் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com