நீதி மறுக்கப்படுவது இறுதியில் அராஜகத்திற்கு வழிவகுக்கும்: தலைமை நீதிபதி ரமணா

நீதி மறுக்கப்படுவது இறுதியில் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா

ஸ்ரீநகர்: நீதி மறுக்கப்படுவது இறுதியில் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்றும், "ஆரோக்கியமான ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்கு, மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவதை உணர வேண்டியது அவசியம்"  என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்திற்கான புதிய வளாகக் கட்டடத்திற்கு தலைமை நீதிபதி ரமணா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். 

பின்னர் அவர் பேசுகையில், "உள்கட்டமைப்பு பிரச்னைகளை தீர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உள்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலின் அவசியத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு, நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீதித்துறை உள்கட்டமைப்பு புதுப்பிக்கப்படவில்லை. 

நீதிமன்றங்களை அனைவருக்கானதாகவும், எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுவதில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதன் மீது நாம் உடனடியாகக் செலுத்தவில்லை என்றால், அனைவருக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற நீதியை அணுகுவதற்கான அரசியலமைப்பு லட்சியம் தோல்வி அடையும்." 

ஒட்டுமொத்த நீதித்துறையின் அடித்தளம் மாவட்ட நீதித்துறை என்றவர், “அடித்தளம் வலுவாக இருந்தால்தான் ஒட்டுமொத்த அமைப்பும் செழிக்க முடியும்.

நான் முன்பே குறிப்பிட்டது போல், நாடு முழுவதும் உள்ள நீதித்துறை உள்கட்டமைப்பின் நிலை திருப்திகரமாக இல்லை. நீதிமன்றங்கள் வாடகைக் கட்டடங்களிலும், மோசமானநிலைமையிலும் இயங்கி வருகின்றன.

மேலும் "அனைத்து நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என்று கூறினார்.

நீதியை உண்மையாக்க கடினமாக உழைக்க நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும். 

“ஒரு நாட்டில் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்ப வெறும் சட்டங்கள் மட்டும் போதாது.

சட்டங்களின் எலும்புக்கூட்டில் உயிரையும் ஆவியையும் புகுத்துவதற்கு உயர்ந்த லட்சியங்களால் ஈர்க்கப்பட்ட அழியாத குணமுள்ள மனிதர்கள் தேவை," என்று கூறியவர்,  "பொது மனிதர்கள் எப்போதும் நீதித்துறையை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் இறுதிக் காவலராகக் கருதுகின்றனர்.

உங்களின் விரைவான, செயல் ஊக்கமான மற்றும் உணர்வுதிறன் மிக்க முடிவு, நீதியின் அவநம்பிக்கையான பலரின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்.

பெரும்பாலும், வழக்குத் தொடுப்பவர்கள்  "மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பார்கள்" என்பதால், அவா்களுக்கு வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் நீதி வழங்கல் முறையானது மிகவும் "சிக்கலானது மற்றும் விலை மிக்கதாகவும்" இருப்பதாகவும், அவை நீதிமன்றங்களை உள்ளடக்கியதாக மற்றும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் நாடு மிகவும் பின்தங்கியிருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை உணர வேண்டும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் செயல்பாட்டுக்கு முக்கியம். "மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் போது மட்டுமே அமைதி தவழும்".

சர்ச்சைகளுக்கு விரைவாக தீர்ப்பளிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், "நீதி மறுக்கப்படும்பட்சத்தில், அது அராஜகத்திற்கு வழிவகுக்கும். அதன் மூலம் நீதித் துறை விரைவில் சீா்குலைந்துவிடும். ஏனெனில், தங்கள் பிரச்னைகளுக்கான தீா்வுக்கு சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளை மக்கள் தேடுவார்கள்.

"அனைவருக்கும் எளிதில் விரைந்து நீதி கிடைக்கச் செய்வதை முறையான நீதித் துறை கட்டமைப்பால் உறுதி செய்ய முடியாததே சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக உள்ளது. இந்தியாவில் நீதி வழங்கும் வழிமுறை சிக்கலாகவும், விலை உயா்ந்ததாகவும் உள்ளது."

நீதித்துறையானது அதன் செயல்பாடுகளில் உள்ள சவால்களை நியாயமான மற்றும் அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளின் மூலம் எதிர்கொள்வதை உறுதி செய்ய புதுமையான சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார். 

மேலும், நீதித் துறைக்கு வலுவான உதவியாகத் தொழில்நுட்பம் உள்ளது. நேரம், செலவு, பயணத்தைக் குறைப்பதன் மூலம் நீதிமன்றங்களை எளிதில் அணுகுவதில் உள்ள இடைவெளியை தற்போது காணொலி வழக்கு விசாரணைகள் நிரப்புகின்றன. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் சமநிலை இல்லாத இந்தியா போன்ற நாட்டில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் முழுத் திறனையும் பயன்படுத்த நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று ரமணா கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com