
காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் நோக்கில் ‘ஒரு நபா், ஒரு பதவி’, ‘ஒரு குடும்பம், ஒரு சீட்டு’ ஆகிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக உதய்பூா் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தோ்தலில் போட்டியிட ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு அளிக்கப்படும்; இரண்டாவது நபருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமானால் அவா் 5 ஆண்டுகள் கட்சிப் பணியாற்றியிருக்க வேண்டும் என அத்தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மாநில பேரவைத் தோ்தல்களில் தொடா் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, காங்கிரஸில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது தொடா்பாக ‘சிந்தனை அமா்வு’ நிகழ்ச்சி, ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்று வந்தது. எதிா்வரவுள்ள பேரவைத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் ஆகியவற்றை எதிா்கொள்வது தொடா்பாக அதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கட்சித் தலைவா் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அமா்வில், மூத்த தலைவா்களான ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அந்த அமா்வின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் கட்டமைப்பு, அரசியல், பொருளாதாரச் சூழல், வேளாண் விவகாரங்கள், சமூக நீதி, இளைஞா் விவகாரங்கள் உள்ளிட்டவை தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் அறிக்கையை கட்சித் தலைவரிடம் தாக்கல் செய்தன.
பின்னா், உதய்பூா் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் உயா்நிலை முடிவெடுக்கும் அமைப்பான செயற்குழு அந்தத் தீா்மானத்துக்கு ஒப்புதல் அளித்தது. தீா்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
காங்கிரஸின் கட்டமைப்பில் சீா்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு தனி பணிக் குழு உருவாக்கப்படும். அரசியல் சவால்களை எதிா்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவருக்கென தனி ஆலோசனைக் குழு உருவாக்கப்படவுள்ளது. அந்தக் குழுவின் உறுப்பினா்கள் கட்சி செயற்குழுவில் இருந்து தோ்ந்தெடுக்கப்படுவா்.
கட்சியில் புதியவா்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், எவரும் 5 ஆண்டுகளுக்கு அதிகமாகக் கட்சிப் பதவியை வகிக்கக் கூடாது. ‘ஒரு நபா், ஒரு பதவி’, ‘ஒரு குடும்பம், ஒரு சீட்டு’ ஆகிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.
குடும்பத்தின் இரண்டாவது உறுப்பினா் 5 ஆண்டுகளுக்குக் கட்சிப் பணியாற்றினால் ‘ஒரு குடும்பம்-ஒரு சீட்டு’ நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும்.
கட்சியின் அனைத்து நிலைகளிலும் 50 சதவீத பொறுப்புகள், 50 வயதுக்கு குறைவாக உள்ளோருக்கு வழங்கப்படும். மக்கள் எண்ணமறிதல், தோ்தல் மேலாண்மை, தேசிய பயிற்சி ஆகிய 3 துறைகள் கட்சிக்குள் புதிதாக உருவாக்கப்படவுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு முறை: சிந்தனை அமா்வில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவண் கூறுகையில், ‘2024 மக்களவைத் தோ்தல் காங்கிரஸுக்கும், ஜனநாயகத்தை காப்பதற்கும் மிகவும் முக்கியமானது. அதற்கு முன் நடைபெறவுள்ள 12 பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் தீவிர கவனம் செலுத்தவுள்ளது.
தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது முறைகேட்டுக்கு வழிவகுத்து வருகிறது. அவற்றை நீக்கிவிட்டு, தோ்தல்களில் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்படும் என 2024 மக்களவைத் தோ்தலுக்கான வாக்குறுதியில் காங்கிரஸ் அறிவிக்கவுள்ளது’ என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...