இரு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி: ராகுல் காந்தி

ஏழைகளுக்கு ஒரு இந்தியா, பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என இரு வேறு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஏழைகளுக்கு ஒரு இந்தியா, பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என இரு வேறு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவில் உள்ள கரானா கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

பழங்குடியினருக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான உறவு என்பது மிகவும் பழமையானது மற்றும் ஆழமானது. உங்கள் வரலாற்றை நாங்கள் பாதுகாக்கிறோம். உங்கள் வரலாற்றை அழிக்கவோ, ஒடுக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. எங்கள் ஆட்சியின்போது, உங்களின் நிலங்கள், காடுகள், தண்ணீரை பாதுகாக்க வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றினோம்.

இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அனைவரையும் ஒன்றிணைக்க, அனைவருக்கும் மரியாதை அளிக்க, அனைவரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் சித்தாந்தங்களுடன் காங்கிரஸும், மறுபுறம் பழங்குடியினரின் வரலாறு - கலாசாரத்தை பிளவுபடுத்து அழிக்கும் சித்தாந்தங்களுடன் பாஜகவும் உள்ளன.

நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம்; அவர்கள் பிளவுபடுத்துகிறார்கள். நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்; அவர்கள் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவுகிறார்கள்.

பொருளாதாரத்தின் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி வரியை பிரதமர் அமல்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்துள்ளன. பொருளாதாரத்தை வலுப்படுத்த காங்கிரஸ் அரசு வேலை செய்தது, ஆனால், மோடி அரசு அதை அழித்துள்ளது. தற்போது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாது நிலைமை உருவாகியுள்ளது.

பாஜக இரு வேறு இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. 2 அல்லது 3 தொழிலதிபர்களுக்காக ஒரு இந்தியாவும், எழை, தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒரு இந்தியாவையும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். நமக்கு இரு இந்தியா தேவையில்லை, அனைவரின் கனவுகளும் நிறைவேற வாய்ப்பு வழங்கும் ஒரு இந்தியா மட்டுமே தேவை என்றார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ராஜஸ்தானின் உதய்ப்பூரில் காங்கிரஸின் மாநாடு நடைபெற்றன. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முக்கிய தலைவர்கள் பங்கேற்று கட்சியின் வருங்கால திட்டங்கள் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com