
ஆமதாபாத்: 1979ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை இடிந்து ஏற்பட்ட பேரிடரில் சிக்கி உயிர் தப்பிய பெண்ணுக்கு இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.
19 வயதாக இருந்த மும்தாஜ் மக்வானா, சுமார் 2000 பேரின் உயிர்களை பலி வாங்கிய அந்த விபத்தின் போது உயிர் தப்பிக் கடந்த 43 ஆண்டுகளாக அந்த பயங்கர நினைவுகளுடன் வாழ்ந்து வந்தார்.
இதையும் படிக்க | 'பாலம் இடிந்தது கடவுள் செயல் அல்ல; ஊழலின் விளைவு' - எதைச் சொன்னார் பிரதமர் மோடி?
மச்சு அணை வெடித்து அக்கம் பக்கத்தில் இருந்த கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து, ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்த விபத்தில் தப்பி, 62 வயதை எட்டியிருந்த மும்தாஜ், ஞாயிற்றுக்கிழமை அதே மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து பலியான 135 பேரில் ஒருவராகிப் போனார்.
தனது தாய் உயிர் பிழைத்த அந்த அணை வெடிப்பு சம்பவம் குறித்து அடிக்கடி அவர் நினைவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வார், ஆனால் தற்போது அவரே நினைவாகிப் போனாரே என்று கலங்கி அழுகிறார் அவரது மகன் தாரிக்.
வெள்ளத்தில் சிக்கிய பலரையும் தனது தாய் அந்த வயதிலேயே துணியைப் போட்டு இழுத்துக் காப்பாற்றியதாகவும், அவரைப் பற்றி அவரது பெற்றோர் பெருமையாகச் சொல்லக் கேட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
அந்த விபத்து நேரிட்ட போது, மூன்று நாள்கள் வீட்டின் கூரை மீதே அமர்ந்திருந்ததாகக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல ரெடியான மோர்பி மருத்துவமனை: விடியோ வெளியிட்ட பிரசாந்த் பூஷண்
விபத்து நிகழ்ந்த ஞாயிறன்று, மும்தாஜ், தாரிக்கின் மனைவி ஷபானா (28), மகன் ஆஷாஹ்த் (8) ஆகியோர், புதிதாகத் திறந்த பாலத்தைக் காணச் சென்றதாகவும், அவர்கள் யாருமே திரும்பி வரவில்லை என்றும் கூறுகிறார் தாரிக்.
எங்களுக்கு நீதி வேண்டும் என்றும், எங்களது இழப்பை ஈடு செய்யவே முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.