வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல ரெடியான மோர்பி மருத்துவமனை: விடியோ வெளியிட்ட பிரசாந்த் பூஷண்

மோடி வருகைக்காக மோர்பி மருத்துவமனை புனரமைக்கப்பட்டதாக விமரிசித்திருக்கும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் விடியோ வெளியிட்டிருக்கிறார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல ரெடியான மோர்பி மருத்துவமனை: விடியோ வெளியிட்ட பிரசாந்த் பூஷண்
வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல ரெடியான மோர்பி மருத்துவமனை: விடியோ வெளியிட்ட பிரசாந்த் பூஷண்


புது தில்லி: கமல் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவதைப் போல, மோடி வருகைக்காக மோர்பி மருத்துவமனை புனரமைக்கப்பட்டதாக விமரிசித்திருக்கும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் விடியோ வெளியிட்டிருக்கிறார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் ஹிந்தி ரீமேக் படம் முன்னாபாய் எம்பிபிஎஸ். இப்படத்தில் வரும் காட்சிகளையும், மோர்பி மருத்துவமனையை புனரமைத்தது மற்றும் சாலைகள் போட்ட விடியோக்களையும் ஒன்றாக இணைத்து ஒரு விடியோவை அவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண் கூறியிருப்பதாவது, மோர்பி மருத்துவமனைக்கு மோடி வருகையை முன்னிட்டு, மருத்துவமனையில் மின்னல் வேகத்தில் நடந்த புனரமைப்புப் பணிகள் நமக்கு முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தையே நினைவூட்டுகிறது.

சோக நிகழ்வுகளைக் கூட கேலிக்கூத்தாக்க நினைப்பதால், சில நேரங்களில், நடக்கும் நிகழ்வுகள் நகைச்சுவைக்கு மிக அருகே வந்துவிடுகின்றன என்று பதிவிட்டு, விடியோவையும் இணைத்துள்ளார்.

இந்த விடியோவில், மோர்பி மருத்துவமனையில் நடக்கும் புனரமைப்புப் பணிகள், இதுவரை தாரையே பார்க்காத சாலைகளுக்கு தார்பூசும் பணி நடப்பது என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மோர்பி அரசு மருத்துவமனைக்கு வந்த பிரதமர் மோடி, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குஜராத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 130க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 135-ஆக ஆனது.

மோா்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டார். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சைபெற்று வருவோரையும் நேரில் சந்தித்து மோடி நலம் விசாரித்தார்.

பிரதமர் மோடி மோர்பி மருத்துவமனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, அரசு மருத்துவமனை ஊழியர்களும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் தொடங்கின. 

300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றன. இந்த மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய 6 பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். முன்னதாக 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதி மஞ்சள் நிறத்திலும், மருத்துவமனையின் உள் பகுதிகள் வெள்ளை நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டன. குப்பைகள் வெளியேற்றப்பட்டன. கழிவறைகளில் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. குடிநீர் குழாய்கள் புதிதாக மாற்றப்பட்டன.

இதனை காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து விமர்சனம் செய்திருந்தது.  இரவோடு இரவாக அரசு மருத்துவமனையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வர்ணம் பூசும் பணிகள் உள்பட, புதிதாக டைல்ஸ் ஒட்டுதல், சுவர்களை பூசுதல் என பிரதமர் மோடியின் வருகைக்காக மருத்துவமனை அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com