மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் எந்த அதிசயமும் இல்லை: பார்த்தாலே புரியும்

135 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் எந்த அதிசயமும் இல்லை: பார்த்தாலே புரியும்
மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் எந்த அதிசயமும் இல்லை: பார்த்தாலே புரியும்


மோர்பி: 143 ஆண்டுகள் பழமையான மோர்பி தொங்கு பலம் விபத்துக்குள்ளாகி 135 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அதாவது, மோர்பி பாலத்தை சீரமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஒரேவா குழும நிறுவனம், பாலத்தை ஒட்டுமொத்தமாக சீரமைத்திருந்தால், அதற்கான செலவு என்று ரூ.2 கோடி ஆகியிருக்குமாம். இதைத்தான் திட்ட மதிப்பீடு சொல்கிறது. ஆனால், பாலத்தை சீரமைக்காமல், வெறுமனே தொடைத்து பவுடர் போட்டு அழகுப்படுத்திவிட்டு அதற்காக அந்த நிறுவனம் செலவிட்டிருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா வெறுமனே ரூ.12 லட்சம் தான். அதாவது திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 6 சதவீதம் என்கிறது விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள்.

மோர்பி நகரில் அமைந்திருக்கும் இந்த தொங்கு பாலத்தை 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருக்கும் ஒரேவா குழும நிர்வாகி ஜெய்சுக் படேல், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி, பாலம் சீரமைக்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், பாலம் திறப்பதற்குத் தயாராக இருப்பதாகவும், பாலம் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார். பாலத்தை சீரமைக்கும் பணிகள் ஆறு மாதத்தில் நடந்து முடிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில் கிடைத்திருக்கும் தகவலில், மாவட்ட நிர்வாகத்திடமிருந்து ஒப்பந்தம் எடுத்த ஒரேவா குழுமம், பாலத்தை சீரமைக்கும் பணியை மற்றொரு நிறுவனத்திடம் ஒப்பந்தத்துக்கு விட்டுள்ளது. பாலத்தை தடய அறிவியல் துறையினர் நடத்திய சோதனையில், சீரமைப்புப் பணியின்போது, பாலத்தின் அடிப்படை கட்டமைப்பில் ஒரு சிறு கீறல் கூட செய்யப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் எப்படி உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட்டது என்று சொன்னால் அது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். அதாவது, அந்த பாலம் இருக்கும் இடத்துக்கு அக்டோபர் 24ஆம் தேதி வந்த படேல் மற்றும் அவரது குடும்பத்தினர் பாலம் முழுவதையும் நடந்து பார்த்துவிட்டு, உறுதித் தன்மையை சோதித்துவிட்டு பாலத்தை திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கடிகாரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஒரேவா, இதுவரை எந்த கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்ட அனுபவமும் இல்லாதவர்கள். அவர்கள் இந்த ஒப்பந்தத்தை எடுத்து, அதனை மற்றொரு நிறுவனத்திடம் துணை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தப் பணியில் எந்த அனுபவமும் இருந்திருக்கவில்லை.

துணை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் இந்த பாலத்தை சீரமைக்க செலவிட்ட தொகை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், பாலத்துக்கு வர்ணம் பூசுதல், க்ரீஸ் அடித்தல், மெருகேற்றுதல் போன்றவை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, பாலத்தின் துருப்பிடித்த கம்பிகளை மாற்றுதல், பலவீனமடைந்த பிடிமானங்களை சரி செய்தல் போன்ற எதுவும் தொட்டுக்கூட பார்க்கப்படவில்லை என்பது புலனாகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com