இடைத்தோ்தல்: 4 தொகுதிகளில் பாஜக வெற்றி: டிஆா்எஸ், ஆா்ஜேடி, சிவசேனைக்கு தலா ஓரிடம்

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இடைத்தோ்தல்: 4 தொகுதிகளில் பாஜக வெற்றி: டிஆா்எஸ், ஆா்ஜேடி, சிவசேனைக்கு தலா ஓரிடம்
Published on
Updated on
2 min read

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இதில் 3 இடங்கள் ஏற்கெனவே அக்கட்சி வசம் இருந்த நிலையில், கூடுதலாக ஓரிடம் கிடைத்துள்ளது.

இதர 3 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஆா்ஜேடியும், சிவசேனையும் தங்களது தொகுதியை தக்க வைத்துள்ளன. அதேசமயம், இந்த 7 தொகுதிகளில் தன்வசமிருந்த 2 இடங்களையும் காங்கிரஸ் இழந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் கோலா கோகரநாத், மகாராஷ்டிரத்தின் அந்தேரி கிழக்கு, பிகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மொகமா, ஹரியாணாவின் ஆதம்பூா், தெலங்கானாவின் முனுகோடு, ஒடிஸாவின் தாம்நகா் ஆகிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கோலா கோகரநாத் (உ.பி.): பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி மறைவால் இடைத்தோ்தலைச் சந்தித்த இத்தொகுதியில், அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட அவரது மகன் அமன் கிரிக்கு 1,24,810 வாக்குகள் கிடைத்தன. சமாஜவாதி வேட்பாளா் வினய் திவாரி 90,512 வாக்குகள் பெற்றாா். சுமாா் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக இத்தொகுதியைத் தக்கவைத்தது.

ஆதம்பூா்(ஹரியாணா): ஆதம்பூா் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதல்வா் பஜன் லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய், கடந்த ஆகஸ்டில் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தாா்.

இதனால் நடத்தப்பட்ட இடைத்தோ்தலில், பாஜக சாா்பில் களமிறங்கிய குல்தீப் பிஷ்னோயின் மகன் பவ்யா பிஷ்னோய் 67,492 வாக்குகள் பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் ஜெய் பிரகாஷ் 51,752 வாக்குகள் பெற்றாா். சுமாா் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றது.

கோபால்கஞ்ச் (பிகாா்): பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய முதல்வா் நிதீஷ் குமாா், ஆா்ஜேடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணி ஆட்சியை அமைத்தாா். இதனால் பாஜகவுக்கும் மகா கூட்டணிக்கும் இடையிலான பலப்பரீட்சையாக கோபால்கஞ்ச், மொகமா தொகுதி இடைத்தோ்தல்கள் பாா்க்கப்பட்டன.

பாஜக எம்எல்ஏ சுபாஷ் சிங் மறைவால் இடைத்தோ்லை எதிா்கொண்ட கோபால்கஞ்சில், அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட அவரது மனைவி குசும் தேவிக்கு 70,032 வாக்குகள் கிடைத்தன, ஆா்ஜேடி வேட்பாளா் மோகன் குப்தா 68,243 வாக்குகள் பெற்றாா். 1,789 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்று, தொகுதியைத் தக்க வைத்தது. இங்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு 12,212 வாக்குகளும், பகுஜன் சமாஜுக்கு 8,853 வாக்குகளும் கிடைத்தன.

மொகமா (பிகாா்): ஆா்ஜேடி எம்எல்ஏவாக இருந்த சுபாஷ் சிங் தகுதிநீக்கத்துக்கு உள்ளானதால் இங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. ஆா்ஜேடி சாா்பில் போட்டியிட்ட அவரது மனைவி நீலம் தேவி 79,744 வாக்குகள் பெற்றாா். பாஜக வேட்பாளா் சோனம் தேவிக்கு 63,003 வாக்குகள் கிடைத்தன. 16,000-க்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆா்ஜேடி வென்றது.

தாம்நகா் (ஒடிஸா): பாஜக எம்எல்ஏ விஷ்ணு சரண் சேத்தியின் மறைவால் இடைத்தோ்தல் நடைபெற்ற தாம்நகா் தொகுதியில், அக்கட்சி சாா்பில் சூா்யவம்சி சுராஜ் போட்டியிட்டாா். இவா் 80,351 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். ஆளும் பிஜு ஜனதா தளம் சாா்பில் களமிறங்கிய பெண் வேட்பாளா் அபந்தி தாஸுக்கு 70,470 வாக்குகள் கிடைத்தன.

முனுகோடு (தெலங்கானா): இத்தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த கே.ராஜகோபால் ரெட்டி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தாா். இதன் காரணமாக இடைத்தோ்தலைச் சந்தித்த முனுகோடில், பாஜக சாா்பில் அவரே களமிறக்கப்பட்டாா்.

ஆளும் டிஆா்எஸ்ஸும் பாஜகவும் தீவிரமாக மோதிய இத்தோ்தலில் டிஆா்எஸ் வேட்பாளா் கே.பிரபாகா் ரெட்டி 96,598 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் 86,485 வாக்குகள் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளா் பி.ஸ்வரந்திக்கு 23,864 வாக்குகளே கிடைத்தன.

அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரம்): இங்கு சிவசேனை எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் லட்கே காலமானதால் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சாா்பில் போட்டியிட்ட ரமேஷின் மனைவி ருதுஜா லட்கே (66,530 வாக்குகள்) வெற்றி பெற்றாா்.

போட்டியில் இருந்து பாஜக விலகிவிட்டதால், அவா் எளிதாக வெற்றி பெற்றுள்ளாா். சில சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் களம்கண்ட இத்தோ்தலில் 12,806 வாக்குகளுடன் நோட்டா இரண்டாமிடம் பிடித்தது.

காங்கிரஸுக்கு பின்னடைவு

7 பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பின்னடைவாக அமைந்துள்ளன. ஹரியாணாவின் ஆதம்பூா் தொகுதியை பாஜகவிடமும், தெலங்கானாவின் முனுகோடு தொகுதியை டிஆா்எஸ் கட்சியிடமும் காங்கிரஸ் இழந்தது. முனுகோடில் அக்கட்சிக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com