பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான (இடபிள்யுஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான (இ.டபிள்யு.எஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, 10 சதவீத இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த விவகாரத்தில் கடந்த செப்டம்பரில் ஆறரை நாள்கள் தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை ஒத்திவைப்பதாக செப்டம்பா் 27-இல் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று(திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதன்படி, பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எபெலா எம்.திரிவேதி, ஜே.பி.பாா்திவாலா ஆகிய மூவரும் தீர்ப்பளித்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

ஆனால், இந்த 10% இட ஒதுக்கீடு சட்டவிரோதம் என நீதிபதி ரவீந்திர பட் கூறியுள்ளார். நீதிபதி ரவீந்திர பட்டின் கருத்தை ஆதரிப்பதாக தலைமை நீதிபதி யு.யு. லலித் கூறியுள்ளார். 

இதன்படி, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எபெலா எம்.திரிவேதி, ஜே.பி.பாா்திவாலா ஆகிய மூவரும் இட ஒதுக்கீடு ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவரும் இட ஒதுக்கீடுக்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். 

நீதிபதிகள் கருத்து

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி: இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை மீறவில்லை, சமத்துவத்தை மீறவில்லை.

நீதிபதி பெலா எம்.திரிவேதி: 10% இட ஒதுக்கீடு செல்லும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது.

நீதிபதி பாா்திவாலா: ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுக்கு கால நிர்ணயம் தேவை. மேலும் சமூக முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீடு முறை பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். 

நீதிபதி ரவீந்திர பட்: சாதி பாகுபாடு இல்லாமல் அனைத்து சாதிகளிலும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது சமத்துவ கோட்பாட்டுக்கு எதிரானது, இது அரசியலைப்புச் சட்டத்தையே எதிர்ப்பதால் செல்லாது என்று விளக்கமளித்துள்ளார். 

தலைமை நீதிபதி: நீதிபதி ரவீந்திர பட் கூறிய கருத்துகளுடன் ஒத்துப்போகிறேன். அவரது தீர்ப்பை ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com