ஞானவாபி மசூதி வழக்கு: அடுத்த உத்தரவு வரும் வரை பாதுகாப்பு- உச்ச நீதிமன்றம்

சிவலிங்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானவாபி மசூதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சிவலிங்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானவாபி மசூதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் இன்று பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் கடந்த மே 17ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு, அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று, ஞானவாபி மசூதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. கோயிலின் ஒருபகுதியை இடித்துவிட்டே மசூதி கட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய சில ஹிந்து பெண்கள், மசூதியின் பக்கவாட்டுச் சுவரில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களின் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு தொடா்பாக முறையீடு, மேல் முறையீடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இருபதாண்டு அனுபவமிக்க மாவட்ட நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே வேளையில், ஞானவாபி மசூதி வளாகத்துக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மசூதியில் இஸ்லாமியா்கள் தொழுகையைத் தொடா்ந்து நடத்தவும் கடந்த மே 17-ஆம் தேதி அனுமதித்திருந்தது.

இந்த வழக்கை வாராணசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்தது. மசூதியில் நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிவலிங்கம் உள்ளதாகவும், அதன் தொன்மையைக் கணக்கிடுவதற்காக காா்பன் ஆய்வு முறையை நடத்த வேண்டும் எனவும் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாரா்கள் சிலா் தரப்பில் முறையிடப்பட்டது.

அந்தக் கோரிக்கையை மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 14-ஆம் தேதி நிராகரித்தது. அதற்கு எதிராக லக்ஷ்மி தேவி உள்ளிட்ட மனுதாரா்கள் சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசூதி வளாகத்தில் உள்ள ஹிந்து கடவுள்களை வழிபடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை மாவட்ட நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், மசூதி வளாகத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வரும் 12-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அந்தப் பாதுகாப்பை மேலும் நீட்டிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் ஹிந்து மனுதாரா்களின் வழக்குரைஞா் வியாழக்கிழமை முறையிட்டாா்.

இந்த விவகாரத்தை அவசர நோக்கில் விசாரிக்க அவா் கோரியதையடுத்து, வழக்கை விசாரிப்பதற்கான 3 நீதிபதிகளைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com