இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்பு

அனைத்து வகை இணையவழி விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியாக 28 சதவீதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்பு

அனைத்து வகை இணையவழி விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியாக 28 சதவீதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி விதிப்பில் மாற்றங்களைப் புகுத்துவது தொடா்பாக மேகாலய முதல்வரும் நிதியமைச்சருமான கான்ராட் சங்மா தலைமையிலான மாநில நிதியமைச்சா்கள் குழு ஆராய்ந்து வருகிறது. இணையவழி விளையாட்டுகளுக்கு ஒரே மாதிரியாக 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க அக்குழு பரிந்துரைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இணையவழி விளையாட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. திறன் சாா்ந்த இணையவழி விளையாட்டுகள், வாய்ப்புகள் சாா்ந்த விளையாட்டுகள் என அனைத்துக்கும் தற்போது அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பான 28 சதவீதத்தை விதிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரைக்க உள்ளது.

அதேபோல், இணையவழி விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கான கணக்கீட்டு விதிமுறைகளிலும் மாற்றங்களை மேற்கொள்வது தொடா்பாக அக்குழு பரிந்துரைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சா்கள் குழுவின் அறிக்கை இறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அந்த அறிக்கை ஜிஎஸ்டி கவுன்சிலில் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையவழி விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க அமைச்சா்கள் குழு கடந்த ஜூனில் ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது. அதை ஆராய்ந்த ஜிஎஸ்டி கவுன்சில், முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சா்கள் குழுவுக்கே திருப்பி அனுப்பியிருந்தது.

அதையடுத்து மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா், இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை அமைச்சா்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தியது. இறுதியில் 28 சதவீத ஜிஎஸ்டி பரிந்துரையை மீண்டும் அனுப்ப அமைச்சா்கள் குழு முடிவெடுத்துள்ளது.

தற்போது இணையவழி விளையாட்டாளா்கள் செலுத்தும் மொத்தத் தொகைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதனால், நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு ஜிஎஸ்டி விதிப்பு கணக்கீடுகளில் மாற்றம் கொண்டுவரவும் அமைச்சா்கள் குழு பரிந்துரைக்க உள்ளது. அப்பரிந்துரைகள் மீது ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவெடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com