அடடா இப்படி ஒரு கிராமமா? தேர்தல் பிரசாரத்துக்குத் தடா; வாக்களிக்காவிட்டால் அபராதம்!

தேர்தல் பிரசாரத்திற்கு தடையும், வாக்களிக்காத மக்களுக்கு அபராதமும் விதிக்கும் குஜராத்தின் விநோத கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் சமாதியாலா கிராமம்(படம்: டிவிட்டர்)
ராஜ் சமாதியாலா கிராமம்(படம்: டிவிட்டர்)

தேர்தல் பிரசாரத்திற்கு தடையும், வாக்களிக்காத மக்களுக்கு அபராதமும் விதிக்கும் குஜராத்தின் விநோத கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற ஆளும் பாஜகவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய கட்சித் தலைவர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வரை குஜராத்தின் மூலை, முடுக்கெல்லாம் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஆனால், அதே குஜராத் மாநிலத்துக்குள் இருக்கும் சமாதியாலா என்ற கிராமத்துக்குள் சென்றால், ஒரு போஸ்டர் இல்லை, பேனர் இல்லை.. பேரணிக் கூட்டம் நடத்தி போக்குவரத்து நெரிசலை உருவாக்கவில்லை. ஒரு அரசியல் கட்சிக் கொடி கூட பறக்கவில்லை..  காரணம் பற்றி அறிந்த போது ஆச்சரியம்தான் ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜ் சமாதியாலா கிராமத்தில், 1983ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாருடைய பேச்சை கேட்டும் ஏமாற்றம் அடையாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து வாக்களிப்பதற்காக இந்த முடிவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல், 100 சதவிகித வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வாக்களிக்காத கிராம மக்களுக்கு ரூ. 51 அபராதமும் விதிக்கப்படுகிறது. இதுவரை 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் பல்வேறு யோசனைகளை செய்து வரும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கிராமம் தன்னிச்சையாக 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வழிகண்டுள்ளது நிச்சயம் வியப்பை அளிக்கத்தான் செய்கிறது.

எப்போதோ நடக்கும் தேர்தலுக்கே இவ்வளவுக் கட்டுப்பாடுகள் என்றால், பொதுவான விஷயங்களில் மட்டும் கோட்டை விட்டுவிடுவார்களா என்ன?

குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பொதுவெளியில் போட்டால் ரூ. 51, குட்கா உபயோகித்தால் ரூ. 51, மது அருந்தினால் ரூ. 500, பொய் சாட்சி கூறினால் ரூ. 251, மரம் வெட்டினால் ரூ. 500 என அபராத பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

படம்: டிவிட்டர்/ஏஎன்ஐ
படம்: டிவிட்டர்/ஏஎன்ஐ

ஆனால், இந்த அபராதங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் வேலையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கிராமம் பக்காவாக இயங்குகிறது.

1,700 பேர் வசிக்கும் இந்த சிறு கிராமத்தில், மக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வளவும் சொன்ன பிறகு, இந்த கிராமத்தில் இருக்கும் நவீன வசதிகள் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா என்ன?

இந்த கிராமம் முழுவதும் கம்பியில்லா இணையதள இணைப்புச் சேவை எனப்படும் வை-ஃபை சேவை, குடிநீர் சுத்திகரிப்பான் (ஆர்.ஓ.) உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமமே, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு முன்மாதிரி கிராமமாகத் திகழ்கிறது என்று சொன்னால் அதில் எள்ளளவும் தவறில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com