ரயில் என்ஜினையே களவாடிய பலே திருடர்கள்; மேம்பாலத்தைக் கூட விடவில்லையாம்

டீசலில் இயங்கும் மற்றும் மிகப் பழமையான ரயில் என்ஜின்களையும் இரும்பு ரயில் பாலங்களையும் திருடும் கும்பலால் பிகார் காவல்துறையினர் இரவு நேரத் தூக்கத்தையே தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கோப்பிலிருந்து
கோப்பிலிருந்து


பாட்னா: டீசலில் இயங்கும் மற்றும் மிகப் பழமையான ரயில் என்ஜின்களையும் இரும்பு ரயில் பாலங்களையும் திருடும் கும்பலால் பிகார் காவல்துறையினர் இரவு நேரத் தூக்கத்தையே தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பிகார் மாநிலம் பரௌனி பகுதியில் உள்ள கர்ஹாரா பணிமனைக்குக் கொண்டு வரப்பட்ட டீசல் ரயில் எஞ்ஜினை ஒரு கும்பல் திருடிச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஒட்டுமொத்தமாக எஞ்ஜினைக் கொண்டு செல்ல முடியாது என்பதால், சிறுக சிறுக தினமும் ஒவ்வொரு பாகமாகக் கழற்றிச் சென்று ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த என்ஜினும் காணாமல் போன பிறகுதான் பணிமனையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து என்ஜினின் 13 பாகங்கள் பழைய இரும்புச் சாமான்களை வாங்கும் கடையிலிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதில் மிகவும் ஆச்சரியம் தரும் தகவல் என்னவென்றால், இந்த ரயில் பணிமனை அருகே ஒரு சுரங்கப்பாதை இருப்பதை திருடர்கள் சொல்லித்தான் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இரவில் இந்த சுரங்கப்பாதை வழியாக ரயில் பணிமனைக்கு வரும் திருடர்கள், மெதுவாக ரயில் என்ஜின் பாகங்களை கழற்றி எடுத்துச் சென்றுவிடுவார்களாம். ரயில்வே ஊழியர்கள் பகலில் வேலை செய்வது போல இவர்கள் தினமும் இரவில் வந்து திருடுவதை வேலையா வைத்துக் கொண்டிருந்தனர். இதில் மிகவும் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், அந்த பணிமனைக்கு வந்து செல்ல இப்படி ஒரு சுரங்கப்பாதை இருப்பதை, அங்கு வேலை செய்யும் யாருமோ அல்லது என்ஜின் முழுவதும் காணாமல் போன பிறகும் கூட அதிகாரிகளோ கண்டுபிடிக்கும் அளவுக்கு புத்திசாலிகளாக இல்லை என்று காவல்துறையினர் கூறுவதுதான்.

இதையெல்லாம் விஞ்சும் வகையில் பர்னியா மாவட்டத்தில், அண்மையில், பொதுமக்கள் பார்ப்பதற்காக, உள்ளூர் ரயில் நிலையம் அருகே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த மிகப் பழமையான மீட்டர் கேஜ் ரயில் என்ஜினை ஒருவர் விற்பனை செய்திருப்பது வெளி உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது.

இது பற்றி விசாரித்தபோது, மண்டல பொறியாளர் அளித்த கடிதம் போல போலி கடிதம் தயாரித்து ரயில்வே பொறியாளர் ஒருவர் இந்த என்ஜினை விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் போதாது என்று, பிகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் பாயும் சிதாதார் ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தையே ஒரு கும்பல் திருட முயன்றதுதான். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாலத்துக்கு காவல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாம்.

பல்டானியா பாலம், அப்பகுதியில் மிகப் பிரபலம். அராரியாவின் இருவேறு நகரங்களை இணைக்கும் இந்தப் பாலத்தின் பல முக்கிய பாகங்கள் காணாமல் போனது குறித்து காவல்துறையினருக்கு புகார் வந்தது.

உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவலர்கள், இருக்கும் பாலத்தையாவது பாதுகாக்க வேண்டுமே என்ற கவலையில், அங்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

முன்னதாக, பயன்படுத்தாமல் இருந்த பாலம் ஒன்றை, பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் இருக்கும்போதே, ஒரு கும்பல் பாலத்தைக் கழற்றி வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளது. அதன்பிறகுதான் அவர்கள் திருட்டுக் கும்பல் என்பதே மக்களுக்குத் தெரிய வந்தது. ஒட்டுமொத்த பாலத்தையும் பட்டப் பகலில் ஒரு கும்பல் தங்கள் கண் முன்னே திருடிச் சென்றதை நினைத்து அந்தக் கிராமத்து மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு நடத்திய விசாரணையில், நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் தலைமையிலான திருட்டுக் கும்பல் கைது செய்யப்பட்டு, பாலத்தின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது வேறுகதை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com