முஸ்லிம் மாணவன் தீவிரவாதியா? வகுப்பில் பேராசிரியரின் இழிசெயல்!

கர்நாடகத்தில் பல்கலைக் கழக வகுப்பு ஒன்றில், முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என அழைத்த பேராசிரியரின் விடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
மாணவனுக்கும் பேராசிரியருக்கும் இடையிலான வகுப்பறை வாக்குவாதம்
மாணவனுக்கும் பேராசிரியருக்கும் இடையிலான வகுப்பறை வாக்குவாதம்
Published on
Updated on
2 min read

கர்நாடகத்தில் பல்கலைக் கழக வகுப்பு ஒன்றில், முஸ்லிம் மாணவனைத் தீவிரவாதி என அழைத்த பேராசிரியரின் விடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள விடியோவில், இஸ்லாமிய தீவிரவாதம் நகைப்புக்குரியதல்ல. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பதும் நகைப்புக்குரியதல்ல என மாணவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.  

கர்நாடகத்திலுள்ள மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வகுப்பறை நடந்துகொண்டிருந்தது. அப்போது பேராசிரியர் ஒருவர், முஸ்லிம் மாணவரைத் தீவிரவாதி எனக் குறிப்பிட்டு அழைத்துள்ளார்.

வகுப்பறையில் பல மாணவர்கள் முன்பு தன்னுடைய மதம் சார்ந்து தவறான கண்ணோட்டத்துடன் இழிவுபடுத்தியதால் மனமுடைந்த மாணவன் தொடர்ந்து பேராசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த வாக்குவாதம் முழுவதும் சக மாணவரால் விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரலால் பகிரப்பட்டு, பேராசிரியருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

கல்வி நிலையங்களில் மதச்சார்பின்மையோடு பாடம் எடுத்து எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்க வேண்டிய பேராசியர்களே, மதவெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்தில் வகுப்பறையில் பேசிய பேராசிரியருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

அந்த விடியோவில் நடந்த வாக்குவாதம், தீவிரவாதி என அழைத்து முஸ்லிம் மாணவரைக் குறிப்பிடுகிறார் பேராசிரியர். 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், தொடர்ந்து பேராசிரியரிடம் கேள்வி எழுப்புகிறார். 

''இது நகைச்சுவையல்ல. நீங்கள் பேசியது ஏற்கத்தக்கதல்ல. நீங்கள் என் மதத்தை வைத்து கேலி செய்யவேண்டிய அவசியமில்லை. அதுவும் இத்தனை கடுமையான வார்த்தையை சொல்லி கேலி செய்வீர்களா?'' என்கிறார் ஆத்திரத்துடன். 

இதனால், மாணவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் பேராசிரியர். ''நீ என் மகனைப் போன்றவன்''. என்கிறார். 

''என் தந்தை இப்படி பேசினால், அவரை நான் தந்தையாகவே ஏற்க மாட்டேன்'' என மாணவன் பதிலளிக்கிறார்.

''இது கேலியாக வந்த வார்த்தை. ஏன் இத்தனை கோபமடைகிறாய்'' என்கிறார் பேராசிரியர். 

''இல்லை சார். இது கேலிக்குரியது அல்ல. 26/11 கேலிக்குரியதல்ல. இஸ்லாமிய தீவிரவாதம் கேலிக்குரியதல்ல. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பது மற்றும் இது போன்ற சூழல்களை எதிர்கொள்வதும் கேலி அல்ல'' என மாணவன் தன் ஆதங்கத்துடன் கூறுகிறார். 

''நீ என் மகனைப் போன்றவன்'' என பேராசிரியர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். 

''உங்கள் சொந்த மகனை நீங்கள் தீவிரவாதி என அழைப்பீர்களா? என்னை நீங்கள் எப்படி அவ்வாறு அழைக்கலாம்? அதுவும் வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் முன்பு. நீங்கள் கல்வி கற்பிக்கும் தொழிலைச் செய்கிறீர்கள். நீங்கள் பேராசிரியர்''. என்கிறார் மாணவர். 

இறுதியில் பேராசிரியர் மன்னிப்பு கேட்கிறார். 

ஆனால், மிகுந்த வேதனையடைந்த மாணவர், ''நீங்கள் கேட்கும் மன்னிப்பால்  என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது மாறாது. நீங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்திக்கொண்டீர்கள் என்பதும் மாறாது'' எனக் குறிப்பிடுகிறார். 

இந்த விடியோவில், பேராசிரியருக்கும் மாணவருக்குமிடையே வாக்குவாதம் நடக்கும்போது பாதிக்கப்பட்ட மாணவனுக்கு வகுப்பறையில் ஒரு மாணவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதுதான் மிகுந்த சோகம்.  

விடியோவைக் காண...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com