சீனத்தில் கரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நிலைமை என்னவாகும்?

சீனாவில் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பொதுமுடக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டக் காட்சிகள்.
போராட்டக் காட்சிகள்.


சீனாவில் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பொதுமுடக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.

நிலைமை என்னவாகும்?
நவம்பர் மாத முதல் வாரத்திலேயே, கரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டபோது, கரோனா மருந்துகளுக்கும், கரோனா அறிகுறிகளை கண்டறியும் கருவிகளையும் மக்கள் வாங்கிக் குவித்திருந்தனர்.

ஒரு வேளை, சீனத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அங்கு வசிக்கும் சுமார் 120 லட்சம் பேர் ஆக்ஸிஜன் கருவிகளையும் வென்டிலேட்டரையும் வாங்க வேண்டிய நிலை நேரிடலாம். மேலம், இதுபோன்ற கருவிகளை வாங்கும் எண்ணிக்கை சீனத்தில் 90 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சீனத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி வழிவதாகவும், புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் திணறி வருவதாகவும், இதனால், மக்கள் பல ஆயிரங்களைச் செலவிட்டு வென்டிலேட்டர்களையும், ஆக்ஸிஜன் கருவிகளையும் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களின் போராட்டம் காரணமாகவெல்லாம் பொதுமுடக்கத்தை தளர்த்த வாய்ப்பில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்னமும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வரும் சீனாவில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் அபூா்வமானதாகும். ஒரு பக்கம் போராட்டமும், மறுபக்கம் மக்கள் ஆக்ஸிஜன் கருவிகளையும் வென்டிலேட்டர்களையும் வாங்க கடைகளில் குவிந்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக அந்த நாட்டு அரசு கடைபிடித்து வரும் மிகக் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் இதர நகரங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஒரு சிலருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டால் கூட அவா்கள் சாா்ந்த பகுதியை தனிமைப்படுத்துதல், அங்குள்ளவா்களுக்கு திரள் திரளாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது.

அண்மைக் காலமாக, சா்வதேச அளவில் கரோனா தாக்கம் வெகுவாகக் குறைந்ததால் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் தங்களது நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை விலக்கி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன.

ஆனால், சீனா மட்டும் இந்த விவகாரத்தில் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையிலும், அந்த நாட்டில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை கடந்த வாரம் தொட்டது.  ஒரு நாளில் அதிகபட்சமாக 40 ஆயிரம் பேருக்கும் மேல் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கரோனா கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டில் இத்தனை அதிகம் பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

ஏற்கெனவே, கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் முதல்முறையாக கரோனாவுக்கு ஒருவா் இந்த வாரம் பலியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தினசரி கரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தீவிபத்தின் போது அந்தக் கட்டடத்திலிருந்தவா்கள் வெளியேற போலீஸாா் தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனை அதிகாரிகள் மறுத்து வரும் நிலையிலும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்த நகர மக்கள் போராட்டம் நடத்தியது அங்கிருந்து வெளியாகியுள்ள விடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து நகர நிா்வாக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், உரும்கி நகரில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்படும் என்று உறுதியளித்தனா். எனினும், மக்களின் போராட்டம் குறித்து அவா்கள் எதுவும் குறிப்பிடவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com