முஸ்லிம் மாணவனை கசாப் என்றது அவ்வளவு மோசமானது இல்லை: கர்நாடக அமைச்சர்

கர்நாடகத்தில் பல்கலைக் கழக வகுப்பு ஒன்றில், முஸ்லிம் மாணவனைத் தீவிரவாதி கசாப்பின் பெயரைச் சொல்லி பேராசிரியர் அழைத்தது, அவ்வளவு மோசமான விஷயமில்லை என்று கர்நாடக அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவனுக்கும் பேராசிரியருக்கும் இடையிலான வகுப்பறை வாக்குவாதம்
மாணவனுக்கும் பேராசிரியருக்கும் இடையிலான வகுப்பறை வாக்குவாதம்

கர்நாடகத்தில் பல்கலைக் கழக வகுப்பு ஒன்றில், முஸ்லிம் மாணவனைத் தீவிரவாதி கசாப்பின் பெயரைச் சொல்லி பேராசிரியர் அழைத்தது, அவ்வளவு மோசமான விஷயமில்லை என்று கர்நாடக அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், சில குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பெயர்கள் மட்டும் எப்போதுமே தேசிய அளவில் பிரச்னையாகிவிடுகிறது. ஆனால், ராவணன், சகுனி போன்ற வார்த்தைகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது பற்றியெல்லாம் எந்த சர்ச்சையும் ஏற்படுவதில்லை. 

எனவே, மாணவனை கசாப் என்றது அவ்வளவு மோசமான விஷயமாகத் தெரியவில்லைடி. எத்தனையோ முறை நாங்களும் மாணவர்களை ராவணன் என்றோ சகுனி என்றோ அழைக்கிறோம். அப்போதெல்லாம் அது சர்ச்சையானதே இல்லை என்கிறார் நாகேஷ்.

மேலும், இது துரதிருஷ்டவசமான சம்பவம்தான், மாணவரை அவ்வாறு அழைத்திருக்க வேண்டாம் என்றும் முட்டுக்கொடுத்துள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவத்தில், கல்லூரி மாணவனை பயங்கரவாதியின் பெயரைச் சொல்லி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கர்நாடகத்தில் பல்கலைக் கழக வகுப்பு ஒன்றில், முஸ்லிம் மாணவனைத் தீவிரவாதியான கசாப் பெயரில் அழைத்த பேராசிரியரின் விடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள விடியோவில், இஸ்லாமிய தீவிரவாதம் நகைப்புக்குரியதல்ல. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பதும் நகைப்புக்குரியதல்ல என மாணவர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

கர்நாடகத்திலுள்ள மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வகுப்பறை நடந்துகொண்டிருந்தது. அப்போது பேராசிரியர் ஒருவர், முஸ்லிம் மாணவரைத் தீவிரவாதி எனக் குறிப்பிட்டு அழைத்தார். இதனால் மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் முழுவதும் சக மாணவரால் விடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலானது.

அந்த விடியோவில் நடந்த வாக்குவாதம், தீவிரவாதி என அழைத்து முஸ்லிம் மாணவரைக் குறிப்பிடுகிறார் பேராசிரியர். 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், தொடர்ந்து பேராசிரியரிடம் கேள்வி எழுப்புகிறார். 

''இது நகைச்சுவையல்ல. நீங்கள் பேசியது ஏற்கத்தக்கதல்ல. நீங்கள் என் மதத்தை வைத்து கேலி செய்யவேண்டிய அவசியமில்லை. அதுவும் இத்தனை கடுமையான வார்த்தையை சொல்லி கேலி செய்வீர்களா?'' என்கிறார் ஆத்திரத்துடன். 

இதனால், மாணவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் பேராசிரியர். ''நீ என் மகனைப் போன்றவன்''. என்கிறார். 

''என் தந்தை இப்படி பேசினால், அவரை நான் தந்தையாகவே ஏற்க மாட்டேன்'' என மாணவன் பதிலளிக்கிறார்.

''இது கேலியாக வந்த வார்த்தை. ஏன் இத்தனை கோபமடைகிறாய்'' என்கிறார் பேராசிரியர். 

''இல்லை சார். இது கேலிக்குரியது அல்ல. 26/11 கேலிக்குரியதல்ல. இஸ்லாமிய தீவிரவாதம் கேலிக்குரியதல்ல. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பது மற்றும் இது போன்ற சூழல்களை எதிர்கொள்வதும் கேலி அல்ல'' என மாணவன் தன் ஆதங்கத்துடன் கூறுகிறார். 

''நீ என் மகனைப் போன்றவன்'' என பேராசிரியர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். 

''உங்கள் சொந்த மகனை நீங்கள் தீவிரவாதி என அழைப்பீர்களா? என்னை நீங்கள் எப்படி அவ்வாறு அழைக்கலாம்? அதுவும் வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் முன்பு. நீங்கள் கல்வி கற்பிக்கும் தொழிலைச் செய்கிறீர்கள். நீங்கள் பேராசிரியர்''. என்கிறார் மாணவர். 

இறுதியில் பேராசிரியர் மன்னிப்பு கேட்கிறார். 

ஆனால், மிகுந்த வேதனையடைந்த மாணவர், ''நீங்கள் கேட்கும் மன்னிப்பால் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது மாறாது. நீங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்திக்கொண்டீர்கள் என்பதும் மாறாது'' எனக் குறிப்பிடுகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com