ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றமிழைத்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை அல்ல; துறைரீதியான விசாரணை மட்டுமே!

குற்றவியல் நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரைத்தபோதிலும், வெறும் துறை ரீதியான நடவடிக்கைக்கு மட்டுமே தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக அரசாணை மூலம் தெரியவந்துள்ளது.
மக்களை நோக்கிச் சுடும் காவலர்! (கோப்புப் படம்)
மக்களை நோக்கிச் சுடும் காவலர்! (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமான 17 காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  விசாரணை ஆணையம் பரிந்துரைத்தபோதிலும், துறை ரீதியான நடவடிக்கைக்கு மட்டுமே தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 2018-இல் தொடா்  போராட்டத்தைத் தொடங்கினா். போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றபோது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 போ் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக, உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை 2018 ஜூன் 4-ஆம் தேதி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.

4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினாா்.

விசாரணை அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் பாரபட்சமின்றி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மூன்று தாசில்தாரர்களுக்கு, தமிழக அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் 17 பி பிரிவின் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்ததற்காக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவரவில்லை.

தமிழக அரசாணை 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக அரசாணை வெளியிடப்பட்டது, நான்கு விதிமுறைகளின் கீழ் விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகள் மற்றும் அவற்றின் மீது தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழக அமைச்சரவை, ஆகஸ்ட் 29ஆம் தேதி, விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையை ஆராய்ந்து, விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியிருந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து விசாரணை ஆணையம் வழங்கிய ஒன்று மற்றும் இரண்டு பரிந்துரைகளை தமிழக அரசு முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறது. காவல்துறையினர் தனது எல்லையை மீறியுள்ளனர் மற்றும் தங்களது நடைமுறைகளில் தவறுகளையும் செய்துள்ளனர் என்று விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான மூன்றாவது பரிந்துரையில், இந்த துப்பாக்கிச் சூடு நடவடிக்கையில் காவல்துறையினர் அதிகப்படியான நடவடிக்கை இருப்பதையும் ஆணையம் உறுதி செய்திருந்தது.

4-வது பரிந்துரை...


அதேவேளையில், விசாரணை ஆணையத்தின் நான்காவது பரிந்துரையை பகுதியாகவே தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 17 காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான விசாரணைக்கும், எந்த பாரபட்சமும் இன்றி குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்திருந்தது. மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மூன்று வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்திருந்தது. 

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீட்டில், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ரூ. 20 லட்சத்தைக் கழித்துவிட்டு மீதித் தொகையை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 5 லட்சத்தைக் கழித்துவிட்டு மீதித் தொகையை வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் நிவாரணத் தொகைகள் கொடுக்கும் நடைமுறைகள் முடிந்த பிறகு, துப்பாக்கிக் குண்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 மாதங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி பலியான ஜஸ்டின் செல்வா மிதிஷ் குடும்பத்துக்கும் நிவாரணத் தொகை வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

இந்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையின்படி பார்த்தால், அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அளிக்கப்பட்ட மூன்றாவது பரிந்துரை மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடவடிக்கை எதுவும் இல்லை. இழப்பீட்டுத் தொகை தொடர்பான பரிந்துரையையும் தவிர்த்துள்ள அரசு, இனியெதுவும் பணம் தருவதில்லை என்றும் முடிவு செய்துள்ளது. நான்காவது பரிந்துரையில் பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழக அரசு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த 40 பேருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்த 64 பேருக்கு ரூ.1.5 லட்சமும் வழங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com