ஜம்மு-காஷ்மீர் டிஜிபி கொலை: முக்கிய குற்றவாளி கைது

ஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது வீட்டுப் பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் டிஜிபி கொலை: முக்கிய குற்றவாளி கைது
Published on
Updated on
2 min read

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது வீட்டுப் பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் முழுவதும் மாநில காவல்துறையினர் நள்ளிரவிலிருந்து நடத்திய மாபெரும் தேடுதல் வேட்டையில், சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா மரணத்தில் சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றவாளி ஹாசிர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடங்கியிருக்கிறது என்று ஏடிஜிபி முகேஷ் சிங் கூறியுள்ளார்.

சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா
சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா

முதற்கட்ட விசாரணையில், லோஹியா, கடந்த சில நாள்களாக அவரது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவுதான் அவரது அறைக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டுப் பணியாளர் அவருக்கு சில உதவிகளை செய்துள்ளார். பிறகு, அந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிய பணியாளர், டிஜிபியை பயங்கரமாகத் தாக்கியுள்ளார். அறைக்குள் இருந்து புகை எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை வெளியிட்ட குற்றவாளிகயின் வரைபடம்
காவல்துறை வெளியிட்ட குற்றவாளிகயின் வரைபடம்

சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறிய ஜம்மு ஏடிஜிபி முகேஷ் சிங், வீட்டுப் பணியாளர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். அவரை தேடும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிஜிபி லோஹியாவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலைக் குற்றவாளியின் டைரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், அவர் பல்வேறு மனநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கும் நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக உறுதியற்ற தகவல்களை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.