
பயணிகள் தங்களின் செல்லப் பிராணிகளுடன் விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம் என ஆகாசா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளா் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, வினய் துபே மற்றும் ஆதித்ய கோஷ் ஆகியோரின் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஆகாசா ஏா் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் (டிஜிசிஏ) உரிமத்தை பெற்று கடந்த ஆகஸ்ட் 7 முதல் விமான சேவையை வழங்கி வருகிறது.
இதையும் படிக்க: தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி: பெங்களூரு ஓட்டுநர்களின் புதிய முயற்சி
மேலும், அக்டோபா் மாத்தின் இரண்டாவது வாரத்துக்குள் 9 உள்நாட்டு விமான வழித்தடத்தில் வாரந்தோறும் 250-க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆகாசா ஏர் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் வளர்த்தும் செல்லப் பிராணிகளையும் அவர்களுடன் அழைத்துச் செல்லலாம் என்கிற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், புதிய அனுபவத்திற்காக வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பூனை, நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுடன் பயணிகள் பயணம் செய்யலாம். அவற்றின் எடை 7 கிலோக்கு மேல் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதற்கான முன்பதிவு வருகிற அக்.15 ஆம் தேதி துவங்க உள்ளது.