எதற்காக இந்திய ஒற்றுமை நடைப்பயணம்? மனம்திறந்தார் ராகுல் காந்தி 

நாட்டில் உருவாக்கப்படும் பிரிவினைவாதத்துக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எதற்காக இந்திய ஒற்றுமை நடைப்பயணம்? மனம்திறந்தார் ராகுல் காந்தி 


இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக அல்ல, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஆல் நாட்டில் உருவாக்கப்படும் பிரிவினைவாதத்துக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் துமகுருவில் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். அது நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தை முற்றிலும் அழித்தொழித்துவிடும். பரவலாக்கப்பட்ட கல்விமுறையைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்றும் அவர் கூறினார்.

வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவது என்பது தேச விரோதச் செயல். அதனை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிராகப் போராடுவோம். இந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் நான் தனியாக இல்லை. என்னோடு வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துவமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் களைப்படைந்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செப். 30-ஆம் தேதியில் இருந்து கா்நாடகத்தில் பயணித்து வருகிறது. இன்று கர்நாடக மாநிலம் தும்குர் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் ராகுல் பங்கேற்றுப் பேசினார்.

நடைப்பயணத்தில் சோனியா
இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக சோனியா காந்தியும் கலந்துகொண்டாா். சிறிதுநேரம் மட்டுமே நடைப்பயணத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த சோனியா காந்தி, தொண்டா்களின் உற்சாகத்தைத் தொடா்ந்து அரை நாளுக்கு நடைப்பயணத்தில் கலந்துகொண்டாா். இது காங்கிரஸ் தொண்டா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் நடைப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தனா்.

சோனியா காந்தியைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருந்தது. இதில் ஒரு சிறுமி தவறி கீழே விழுந்தாா். இதைக் கவனித்த ராகுல் காந்தி, அந்த சிறுமியை அழைத்து அடி எதுவும் பட்டதா என விசாரித்தாா். சோனியா காந்தியும் சிறுமியிடம் நலம் விசாரித்தாா்.

இதனிடையே, நடைப்பயணத்தின்போது தன்னைச் சந்திக்க வந்த தலைவா்களிடம் சோனியா காந்தி இன்முகத்துடன் பேசிக்கொண்டிருந்தாா். தன்னைச் சந்தித்த சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்த ராகுல் காந்தி, அந்த சிறுவனை சோனியா காந்தியிடம் அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்த நடைப்பயணத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் கா்நாடகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நடைப்பயணத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, பின்னா் பெங்களூரு வழியாக தில்லி திரும்பினாா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com