வழிகிற தேவனும் சாக்லேட் வர்மனும் - யாருடைய பொன்னியின் செல்வன் இவன்?

வெறுமனே ஒரு திரைப்படமாக ஓகே. கல்கியின் பொன்னியின் செல்வனாக?
வழிகிற தேவனும் சாக்லேட் வர்மனும் - யாருடைய பொன்னியின் செல்வன் இவன்?

போற்றுவோர் போற்றத் தூற்றுவோர் தூற்ற இலக்கு என்னவோ அதை எட்டிவிட்டான், தாண்டியும் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறான் செல்லுலாய்ட் பொன்னியின் செல்வன்.

பான் இந்தியா படமாகத் தயாரித்துத் திரையிடப்பட்ட படத்தின் ஒரு வாரத்து வசூலே எங்கேயோ சென்றுவிட்டது. நன்றி : கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

திருக்குறள், பாரதியார் கவிதைகள் நூல்களுக்கு அடுத்துத் தமிழில் மிக அதிக அளவில் விற்ற நாவலாகக் கல்கியின் பொன்னியின் செல்வன்தான் இருக்கும். தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ யாராவது ஒருவர் அடுத்த தலைமுறையைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பொன்னியின் செல்வன் பெயரையும் கல்கியின் பெயரையும் முழுவதுமாக 'பக்கா' முதலாக்கி, பலநூறு கோடிகளாகவும் ஆக்கிவிட்டார்கள் மணிரத்னம் குழுவினர் - எம்.ஜி.ஆராலும் கமல்ஹாசனாலுமே சாத்தியப்படாமல் போன விஷயம் - ஆனால், அந்தக் கல்கியின் படத்தைப் போட்டுத் தொடக்கத்திலேயே ஒரு கார்டு போடலாமே என்ற நன்றிதான் இருக்கவில்லை.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு இனிமேல் தனியே படப்பிடிப்பு எதுவுமில்லை, ஏற்கெனவே எடுத்து முடித்தாகிவிட்டிருக்க வேண்டும். எல்லாம் போஸ்ட் ப்ரடக்-ஷன் வேலைகள் மட்டும்தான். ஆக, இனி வரப் போவது எல்லாமே லாபம்தான். இனியும் படப்பிடிப்பு என்றாலும்கூட சிரமம்தான், நடிகர்கள் எல்லாம் நீளநீளமாகத் தாடி வளர்த்துத் தயாராவதற்குள் காலம் கடந்துவிடும். ஆமாம், எந்தத் தமிழ் மன்னன் தாடியோடு இருந்திருக்கிறான்? எல்லாரும் நன்றாக முகம் மழித்து, குடுமியும் பெரிய மீசையும்தானே வைத்திருக்கிறார்கள், சிற்பங்களில்? துறவிகளும் சித்தர்களும்தானே தாடியுடன் காணப்படுகிறார்கள்?

வெறுமனே ஒரு திரைப்படமாக ஓகே. கல்கியின் பொன்னியின் செல்வனாக?

நாவலில் ஆதித்த கரிகாலனைக் குந்தவை சந்திப்பதில்லை. திரையில் சுந்தர சோழரின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்வதுடன் நந்தினி பற்றிய பிளாஷ்பேக் கதையையும்கூட கரிகாலனைவிட்டே சொல்ல வைத்துவிட்டார்கள். அதெல்லாம்கூட சரிதான். ஒரு நாவல் திரைப்படமாகும்போது நேரிடக் கூடியவைதான். ஆனால், ஆதித்தனின் கோபம் மட்டும் புரிந்தால் போதுமா? அவர் பேசுவதும் புரிய வேண்டும்தானே. கூர்ந்து கவனித்தால் ஒழிய அந்தக் கதை தெரிய வாய்ப்பேயில்லை. எல்லாம் கனவைப் போலவே இருக்கின்றன. இது பொன்னியின் செல்வன் பார்ட் ஒன், பிதாமகன் பார்ட் 2 அல்ல என்று யாராவது விக்ரமிடம் ரகசியமாகவேனும் சொல்லியிருக்கலாம். ஆதித்த கரிகாலன் எத்தனை பெரிய ஆளுமை? உண்மையில் அவனுடைய அரசியல் எத்தகைய ஒன்று? ஆனால், வெறும் ஆவேச கரிகாலனாகவே இருக்கிறார். இதிலே விக்ரம் நடிப்பு வேற லெவல் என்றொரு கூட்டம் வேறு கிளம்பியிருக்கிறது.

வந்தியத் தேவனை வழிகிற தேவனாக்கிவிட்டார்கள். திரைப்படத்தில் எந்தப் பெண்ணைக் கண்டாலும் வழிந்தால் என்னதான் பொருள்? அல்லது இந்த வழிதல் திரைக்கதைக்கு மிகவும் அவசியமாகப் படுகிறதா? அப்படியும் தோன்றவில்லை. அல்லது திரைப்படம் என்றாலே இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கருதிவிட்டார்களா? செக்கும் தெரியாது, சிவலிங்கமும் தெரியாது என்பதைப் போல யாரைப் பார்த்தாலும் காதலான கணையை வீசுவானா வந்தியத் தேவன்? நந்தினி, வானதி, குந்தவை, பூங்குழலி... ஒவ்வொருவரையும் வந்தியத் தேவன் சந்திக்கும் தருணங்களை, அவர்களிடம் பேசுகிற வசனங்களை மீண்டுமொரு முறை ரிவைண்ட் செய்து பார்த்தாலே இந்த அபத்தங்கள் தெரியும்.

அரண்மனைக்குள் சென்று ரகசியமாக சந்தித்துத் திரும்பும்போது, செல்லும் வழியில் கருவூலம் இருக்கும் என்று குறிப்பிடும் நந்தினியைப் பார்த்து, நான் வைரச் சுரங்கத்தையே பார்த்துவிட்டேனே என்று வந்தியத் தேவன் கூறுவதெல்லாம் எந்தவகைச் சுவையின் கீழ் வரும்? நல்லவேளை, இந்தக் கண்றாவிகளையெல்லாம் பார்க்கக் கடம்பூர் கந்தமாறனின் தங்கை மணிமேகலை (நாவலில் வந்தியத் தேவனை சீரியஸாகக் காதலித்து, அந்த சம்பவத்தில் அவன்தான்  கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதி சித்தபிரமையுற்றுவிடுவாள்) திரைப்படத்தில் வரவில்லை.

ஆமாம், வானதியோடும் வந்தியத் தேவன் ஒரு நடனமாட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கிருஷ்ணனும் கம்சனும் நாட்டியமாட வந்தார்களா, தெரியவில்லை. சோழர்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? பூங்குழலியுடனும் வந்தியத் தேவனுக்கு ஒரு பாடல் உண்டு. நந்தினியும் குந்தவையும் தப்பித்தார்கள், இரண்டாம் பாகத்தில் இருக்குமோ என்னவோ?

படத்தில் - கதையில் ஓரளவு ஒன்றி நடித்தவர்களில் அல்லது நடிக்க வைக்கப்பட்டவர்களில் ஒருவர் பூங்குழலியாக வரும் ஐஸ்வர்ய லட்சுமி. ஆனாலும் அவரை அறிமுகம் செய்யும் காட்சி இருக்கிறதே, சில்க் ஸ்மிதாவே தோற்றுப் போய்விட்டிருப்பார். நண்பன் சேந்தன் அமுதன் விரும்புவதால் நான் விண்ணப்பிக்கத் தயங்குவதாக வந்தியத் தேவன் கூற, கதையைப் படிக்காதவர்களுக்கு, அவன் ஏன்டா இங்கே கடலுக்கெல்லாம் வருகிறான் காதலிப்பதற்காக என்று குழம்பிப் போய்விடுகிறது. ஏதோ எடிட்டிங்கில் சேந்தன் அமுதன் - பூங்குழலி எபிசோட் விடுபட்டுவிட்டதுபோல.

விளம்பரத்துக்காக படக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் குந்தவையாக நடித்திருக்கும் திரிஷாதான் பளிச்செனவும் அழகாகவும் தெரிந்தார். தவிர, சர்வ அதிகாரம் கொண்ட குந்தவையாக நடிக்க திரிஷாவுக்குக் கிடைத்த வாய்ப்பு செம லக் என்று நினைத்துக் கொண்டிருந்தால் சில காட்சிகளைத் தவிர படத்தில் கொஞ்சம், அல்ல, நிறையவே ஏமாற்றம்தான். இன்னும் கொஞ்சம்கூட அழகாகக் காட்டியிருக்கலாம், அவரும்கூட இன்னமும் ஸ்கோர் செய்திருக்கலாம். நந்தினியை நன்றாகத் தெரியும்தானே!

ஆனால், அந்த ஏமாற்றத்தை நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் தீர்த்துவைத்துவிட்டார். நாவலிலும் சரி, திரைப்படத்திலும் சரி, நந்தினி மிகவும் ஷார்ப்பான கேரக்டர். எள்ளளவும் குறையாமல் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஓபனிங்கில் தொடங்கி கடைசி வரையிலும் (ஆனால், விளம்பர நிகழ்ச்சிகளில் ஏன் இவர் சோபிக்கவில்லை என்று தெரியவில்லை). இரண்டாவது பாகத்தில் ஊமைராணி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும். சோழப் பேரரசின் வலுவான தாங்குதூணும் படைகளின் தலைவருமான பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) படத்தில் பெரும்பாலான நேரம் நந்தினிக்கு நகைகளைக் கழற்றிவிடுவதிலேதான் இருக்கிறார், பாவம்.

பாவம்தான், வந்தியத் தேவனும் அருள்மொழி வர்மனும்கூட. வந்தியத் தேவன் எத்துணை பெரிய வீரன்? அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழன்தான் எத்துணை கம்பீரத்துக்குச் சொந்தக்காரன்? படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி இருவருக்குமே பொருந்தவில்லை. மிகவும் நளினமாகக் காட்சி தருகிறார்கள். அவர்களுக்கான உடல்மொழி இதுதானா, இப்படித்தானா இருந்திருக்கும்? கார்த்தியோ காதல் பிளஸ் நகைச்சுவையாக மாற்ற, ரவியோ செழித்த உடம்புடன் பாவப்பட்ட பணக்காரரைப் போல இருக்கிறார், இவர்கள்தானா பெரும்போர் வீரர்கள்? ராஜராஜ சோழன் படத்தையும் சிவாஜி கணேசனின் நடையையும் ஒருமுறை இவர்கள் பார்த்திருக்கலாம் (அருள்மொழி வர்மனுக்கு ராணா டகுபதி, வந்தியத் தேவனுக்கு விஷால், நானி போன்றோர் நல்ல தேர்வாக இருந்திருப்பார்களோ என்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது, ஆனால், மார்க்கெட் வேறு மிகவும் முக்கியமாச்சே). சோழ அரசின் முதன்மை அமைச்சரும் அரச நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றுபவருமான அநிருத்த பிரம்மராயரின் தனிப்பட்ட ஒற்றன் ஆழ்வார்க்கடியான் நம்பி. ஆனால், அவன் இவ்வளவு பெரிய காமெடியனாகவும் இருப்பான் என்று இப்போதுதான் தெரிகிறது; ஜெயராமை வதைத்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது.

சோழர் கதையைத்தானே திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள், படத்தில் எங்காவது சோழர் பெருமைகூறும், பெருமிதம் பேசும் அடையாளங்கள் இருக்கின்றனவா?

நாவலில் தொடக்கமே வந்தியத் தேவனுடன் வீரநாராயண ஏரியைப் பற்றிய வர்ணனைகளில்தான். சோழர் கதையில் காவிரி கரை புரண்டிருக்க வேண்டாமா? தஞ்சைத் தரணியின் பச்சைப் பசேல் வயல்வெளிகள் எங்கே? திரைப்படத்தில் வருவதைப் போல தஞ்சையில் எங்கேயிருக்கிறது மலையும் மலை மீதான கோட்டைகளும்? தஞ்சை டெல்டாவிலேயே மலைகள் கிடையாதே. பெரிய கோயிலைக் கட்டுவதற்கான கற்களையே தஞ்சை கொண்டுவர என்ன பாடு பட்டான் ராஜராஜ சோழன் என்று எல்லாருமே படித்திருப்பார்கள்தானே. நார்த்தாமலைக்கும் பாடாலூருக்கும் அலையவில்லையா? இங்கேயோ கேரக்டர்கள் எல்லாம் மலை மீது ஓடிப் பிடித்தும் குதித்தும் விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள். சோழர் அரண்மனை என்றபோதில் திருமலை நாயக்கர் காலத் தூண்கள் எங்கிருந்து முளைத்தன?

உள்ளபடியே கேரக்டர்களின் பெயர்களில்தான் சோழர்கள், கேரக்டர்களின் பெயர்களை மாற்றிவிட்டால் இந்தப் படத்தை எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். பான் இந்தியா படம் என்பதற்காக அடையாளங்களை அழித்துவிடுவார்களா, என்ன? உலகளாவிய திரைப்படம் என்பதற்காக மன்னர்காலக் கதையொன்றில் ரோமாபுரிக்குப் பதிலாக நியு யார்க் நகரைக் காட்டியிருந்தால் ரசிகர்கள் எப்படிக் கைகொட்டிச் சிரித்திருப்பார்கள்? படத்தில் வேறெங்கெல்லாம் சோழர் பெருமிதம் பொங்கிப் பிரவகிக்கிறது என்பதைப் படக் குழுவினர்தான் தெரிவிக்க வேண்டும்.

இசை, திரைக்கதை - நிறையவே பேசிவிட்டார்கள்.

இவர்களுக்கு எல்லாம் கல்கி வேண்டும், நன்றி வேண்டாம்; பொன்னியின் செல்வன் வேண்டும், தஞ்சை மண் வேண்டாம்; பெயர் வேண்டும், பெருமிதம்  வேண்டாம்; வசூல் வேண்டும், வரலாறு வேண்டாம்... யாராவது கேட்டால் எழுதுமொழி வேறு, திரைமொழி வேறு என்றெல்லாம் வரும் வியாக்கியானம்!

படத்தைப் பொருத்துப் பாராட்ட ஒன்றிருக்கிறது, சர்ச்சையாக இருந்தாலும்கூட, வரலாற்றைப் பேச வைத்திருக்கிறார்கள். யார், யாருடைய மகன், என்ன பொற்காலம், சோழர்கள் யார், உறவு என்ன, பகை என்ன... என்றெல்லாம், இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, எல்லா தரப்பு பொதுமக்களும்கூட பேசுகிறார்கள்.

எத்தனையோ திரைப்படங்கள் வருகின்றன, எத்தனையோ நாவல்கள் திரைப்படங்களாகின்றன. பொன்னியின் செல்வனைப் பற்றி மட்டும் ஏன் இத்தனை விமர்சனம் என்பார்கள். ஆமாம், இங்கே அவ்வளவு பேர் அந்த நாவலைப் படித்திருக்கிறார்கள், அந்த கேரக்டர்களுடன் ஒன்றியிருக்கிறார்கள்,  உலவியிருக்கிறார்கள். சோழர்களை மட்டுமல்ல, நாவலையே, கல்கியையே ஒரு பெருமிதமாகக் கருதுகிறார்கள். திரையில் எல்லாமும் கிழிபட்டுத் தொங்கினால் என்னதான் செய்ய முடியும்? ஒருவேளை பொன்னியின் செல்வனுக்குப் பதிலாகக் கன்னியின் செல்வன் என்றொரு படத்தை  மணிரத்னம் எடுத்திருந்தால் குரு, ராவணன், கடல், காற்றுவெளியிடை, செக்கச் சிவந்த வானத்தைப் போல இதையும் கடந்து போயிருப்பார்கள்.

ஆறுதலான விஷயம், கல்கி எப்போதோ செத்துவிட்டார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com